திமுக, அதிமுக ஒழுங்காயிருந்திருந்தா நான் ஏன் கட்சி துவங்குறேன்: விஜயகாந்த்

இடைத்தேர்தலை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும் சங்கரன்கோவிலில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலநீலிதநல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட சின்னகோவிலான்குளத்தில் இருந்து அவர் தனது பிரச்சாரத்தை துவங்கினார்.
பின்னர் அவர் நடுவக்குறிச்சி, வென்றிலிங்காபுரம், தன்னூத்து, சேர்ந்தமரம், கஸ்பா, திருமலாபுரம், வேலப்பநாடாரூர், கடையாலுருட்டி, பாண்டியாபுரம், வெள்ளாளங்குளம் பூவலிங்காபுரம், வேப்பன்குளம் உள்ளிட்ட கிராமங்களில் தனது கட்சி வேட்பாளர் முத்துகுமாருக்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
தமிழகத்தை குடும்ப ஆட்சியில் இருந்து மீட்டு கும்பல் ஆட்சியில் ஒப்படைத்து விட்டோம். அதிமுகவும், திமுகவும் நல்லாட்சி செய்திருந்தால் நான் கட்சியே துவங்கியிருக்க மாட்டேன். தொண்டர்கள் விரும்பியதால் கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம்.
அதிமுக ஆட்சிக்கு வந்த 9 மாதத்தில் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர். எனவே ஆடு, மாடு வழங்குவதை விட்டுவிட்டு படித்த இளைஞர்களுக்கு வேலை கொடுக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என்றார்.
விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஆய்வாய்புலிப்பட்டி, வடக்கு குருவிகுளம், அத்திப்பட்டி, ராமலிங்காபுரம், கே.புதூர், கள்ளிகுளம், நாலுவாசன்கோட்டை, வாகைக்குளம், அவனக்கோனேந்தல், செட்டிகுளம், ராமநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் பிரச்சாரம் செய்தார்.












Click it and Unblock the Notifications