புதிய தலைமைச்செயலக வழக்கு: தடையை நீக்க தமிழக அரசு கோரிக்கை
சென்னை: புதிய தலைமைச் செயலகத்தை பல்நோக்கு நவீன சிறப்பு மருத்துவமனைபோல் வடிவமைப்பை மாற்றக்கூடாது என்று பிறப்பிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது.
வழக்கின் பின்னணி
கடந்த தி.மு.க. அரசு, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகத்தை கட்டியது. பின்னர் வந்த அ.தி.மு.க. அரசு அதை பயன்படுத்தவில்லை. அந்த கட்டிடம் இனி பல்நோக்கு நவீன சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அ.தி.மு.க. அரசு அறிவித்தது. இதை எதிர்த்து வழக்கறிஞர் ஆர்.வீரமணி வழக்கு தாக்கல் செய்தார்.
அதில், புதிய தலைமைச் செயலகத்தை இடித்து மாற்றி மருத்துவமனைக்கான வசதிகளை அங்கு ஏற்படுத்துவதற்கு மேலும் ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடிவரை கூடுதல் செலவாகும். அங்கு மருத்துவமனையைக் கொண்டு வந்தால், தற்போதுள்ள கட்டுமானப் பகுதியில் 60 விழுக்காடு வீணாகும். எனவே இந்த சிறப்பு மருத்துவமனை அமைக்கும் முடிவை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இடைக்காலத் தடை
இந்த வழக்கு நீதிபதிகள் டி.முருகேசன், பி.பி.எஸ்.ஜனார்த்தனராஜா ஆகியோர் முன்பு கடந்த ஜனவரி 20-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டனர்.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள், ரூ.551.80 கோடி செலவில் அமைக்கப்பட்ட கட்டிடத்தில், எந்த அனுமதியும் இல்லாமல் மாற்றங்களை ஏற்படுத்துவதை தற்போது அனுமதிக்க முடியாது. ஏனென்றால், புதிய தலைமைச் செயலகத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்றக்கூடாது என்ற மனுதாரரின் கோரிக்கை ஒருவேளை ஏற்றுக்கொள்ளப்பட்டால், மீண்டும் அரசுக்கு தேவையில்லாமல் அதிக செலவு ஏற்படும்.
எனவே வழக்கு விசாரணை முடியும்வரை அந்த கட்டிட வடிவமைப்பில் எந்த மாற்றங்களையோ, திருத்தங்களையோ கொண்டுவருவதற்கு அரசுக்கு தடை விதிப்பது அவசியம். இதனால் அரசுக்கு எந்த பிரச்சினையும் எழாது. எனவே அந்த கட்டிடத்தின் வடிவமைப்பை மாற்றுவதற்கு, இந்த வழக்கு விசாரணை முடியும்வரை அரசுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது'' என்று உத்தரவிட்டனர்.
தடையை நீக்கக் கோரி மனு
இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் பொதுப்பணித் துறையின் துணைச் செயலாளர் சி.சுப்பிரமணியன் தாக்கல் செய்த பதில்மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:
புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை நவீன மருத்துவமனையாக மாற்றுவது அரசின் கொள்கை முடிவு. அதில் மனுதாரர் குறுக்கிட முடியாது. புதிய தலைமைச் செயலகம் தொடர்பாக கடந்த 28.6.11 அன்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதில், அரசு எங்கு செயல்பட வேண்டும் என்பதை அரசே முடிவு செய்யலாம். பழைய தலைமைச் செயலகத்தில் இருந்து செயல்படுவதாக அரசு முடிவு செய்தால் அதில் உயர்நீதிமன்றம் குறுக்கிடாது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தலைமைச் செயலகத்துக்கு அரசு செல்ல வேண்டும் என்று கோரிய மனுவை பரிசீலிக்கும்படி உயர்நீதிமன்றம் 9.9.11 அன்று உத்தரவிட்டது. அதை பரிசீலித்து அரசு உத்தரவை பிறப்பித்துவிட்டது. எனவே புதிய தலைமைச் செயலக விவகாரம் முடிந்துபோன ஒன்று. எனவே தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.
கட்டிடம் கட்டுவதற்காக கடந்த அரசு, மத்திய சுற்றுப்புறசூழல் அமைச்சகத்தின் அனுமதியைப் பெற்றிருந்தது. ஆனால் அந்த கட்டிடத்தை உபயோகிக்கத் தொடங்குவதற்கு முன்பு பெற வேண்டிய அனுமதியை கடந்த அரசு பெறவில்லை.
28-ல் விசாரணை
நாங்கள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெற்ற பிறகே மருத்துவமனையாக மாற்றுவோம். இதில் மத்திய அரசின் அனுமதியைப் பெறத்தேவையில்லை. கட்டிடத்தின் வடிவமைப்பை மாற்ற அவசியம் ஏற்படவில்லை. கட்டிடத்துக்குள் பைப் லைன், மருத்துவ கழிவுகள் அகற்றும் கட்டமைப்பு, மின் இணைப்புகள் உள்ளிட்டவற்றுக்காக சில மாற்றங்களை மட்டுமே அரசு கொண்டு வரும்.
ஏழை மக்களின் உடல்நலனை பாதுகாப்பதற்காகத்தான் அப்படியொரு முடிவை அரசு எடுத்தது. தற்போதுள்ள தடையால் மக்கள் நலனை பாதுகாப்பதில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதற்கான தடையை நீக்க வேண்டும். தொடர்ந்து தடை நீடித்தால், மக்களின் வரிப்பணம் வீணாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை 28-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications