காஸா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்
ஜெருசலேம்: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை நோக்கிய இஸ்ரேலின் தாக்குதல் மிக உக்கிரமடைந்துள்ளது. காஸாவை நோக்கி முன்னேற தரைவழியிலான ராணுவ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக பாலஸ்தீனியர்களின் காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலுக்குள்ளும் இஸ்ரேல் எல்லையிலிருந்து காஸா நோக்கியும் இருதரப்பினரும் சராமரியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இருதரப்பு நடவடிக்கையால் பலரும் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில் காஸா பகுதியை நோக்கிய இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரமடநிதுள்ளது. தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது.
தற்போதைய நிலைமைகள் குறித்து ராணுவ வானொலியில் பேசிய இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் யோவ் மோர்டெக்சை, எந்த ஒரு நிலைமையையும் எதிர்கொள்ள இஸ்ரேல் தயாராகவே உள்ளது. தரைவழியிலான ராணுவ நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றார்.
காஸா மீதான தரைவழித் தாக்குதல் மூலம் அதனை ஆக்கிரமிக்க முடியும் என்பது இஸ்ரேல் பிரதமர் உட்பட பலரது கருத்து. ஆனால் வியூகங்களுக்கான அமைச்சர் உட்பட சிலர் இதனை எதிர்க்கின்றனர்.
எகிப்தின் நடுநிலையோடு காஸா பகுதியில் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர்நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் இஸ்ரேலிய வான்படையினரின் தாக்குதலில் 15 பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டதையடுத்து மோதல் வெடித்தது. இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் ஒருவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே தற்போதைய மோதல்களுக்கு ஹமாஸ் இயக்கம் பொறுப்பல்ல என்றும் தொடர்ந்தும் இஸ்ரேல் தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்ப்டும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications