இடைத் தேர்தல் முடிவுகள்: சரியும் பாஜக, காங்கிரஸ் கோட்டைகள்!

Subscribe to Oneindia Tamil

kirankumar and Modi
சென்னை: சமீபத்தில் நடந்து முடிந்த இடைத் தேர்தல் முடிவுகள் பல உண்மைகளை உரத்து் சொல்வதாக அமைந்துள்ளது. அதன் சாராம்சம் என்னவென்றால் - பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு பெரும் தேசியக் கட்சிகளின் சாம்ராஜ்யங்கள் தகர்ந்து விழ ஆரம்பித்துள்ளன, பிராந்தியக் கட்சிகளின் கரம் மேலும் மேலும் வலுவடைந்து வருகிறது என்பதே.

ஒரு ஆட்சியை உரசிப் பார்க்கும் உரைகல் இடைத்தேர்தல் என்பார்கள். மேலும், இறுதிப் போட்டிக்குப் போவதற்குத் தயாராக இருக்கும் அரசியல் கட்சிகள் இந்த இடைத் தேர்தல்களை தங்களது பலத்தைப் பரீட்சித்துப் பார்க்கும் அரை இறுதிப் போல நினைத்துக் கொள்ள முடியும். அந்த வரிசையில், 2014ம் ஆணடு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி அமைக்கும் வேலைகளுக்கான அடித்தளமாக இந்த இடைத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.

இடைத் தேர்தல் முடிவுகள் நிச்சயம் கூட்டணி அமைக்கும் யோசனைகளுக்கு பேருதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக இந்த இடைத் தேர்தல் முடிவுகள் பாஜக மற்றும் காங்கிரஸ் தரப்புக்கு பல உண்மைகளைப் புரிய வைத்துள்ளது. அதில் முக்கியமானது, இருவருக்குமே பேஸ்மென்ட் தகர்ந்து போக ஆரம்பித்துள்ளது என்பது.

தங்களின் கோட்டைகள் என்று இந்தக் கட்சிகள் கருதிக் கொண்டு இருந்தவை இப்போது கை மாறிப் போய் விட்டன. இது இரு கட்சிகளுக்குமே அதிர்ச்சிகரமான, ஆனால் உண்மையான விஷயமாகும்.

கர்நாடகத்திலும், குஜராத்திலும் பாஜகவுக்கு மக்கள் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர். கர்நாடகமாவது பரவாயில்லை, கேவலமான பல புகார்களில் தொடர்ந்து பாஜக சிக்கி வருவதால் அங்கு அதற்கு அடி கிடைக்கும் என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் குஜராத்தில்தான் பாஜக எதிர்பாராத அடியை வாங்கியுள்ளது.

அடுத்து மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால் இந்த இரண்டு மாநிலங்களிலிருந்தும் கணிசமான அளவில் எம்.பிக்களை அந்தக் கட்சி பெற்றாக வேண்டும். ஆனால் இரண்டு மாநிலங்களிலும் அந்தக் கட்சிக்கு மக்கள் கொடுத்திருக்கும் ஷாக், பாஜக தலைமையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கர்நாடகத்தில் பாஜகவின் கோட்டையாக திகழ்ந்து வந்த உடுப்பி-சிக்மகளூர் லோக்சபா தொகுதியை, ஜஸ்ட் லைக் தட் காங்கிரஸ் கைப்பற்றி விட்டது. 1998ம் ஆண்டு முதல் இந்தத் தொகுதி பாஜக வசம் இருந்து வந்த கோட்டைத் தொகுதியாகும். இங்கு எம்.பியாக இருந்தவர் சதானந்தா கெளடா. முதல்வராக நியமிக்கப்பட்டதால் சில மாதங்களுக்கு முன்புதான் பதவி விலகினார். அந்தத் தொகுதியைத்தான் தற்போது பாஜக பறி கொடுத்து நிற்கிறது.

சமீபத்தில்தான் பெல்லாரி சட்டசபைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் பாஜக கேவலமான தோல்வியைத் தழுவி டெபாசிட்டையும் பறி கொடுத்தது நினைவிருக்கலாம். இப்போது உடுப்பியில் மக்கள் கடுப்படித்து விட்டனர்.

கட்சிக்குள் நிலவும் உட்கட்சிப் பூசல், ஊழல் புகார்கள் என சரமாரியான சிக்கல்களில் பாஜக சிக்கித் தவித்து வருவதையே இந்த இரண்டு தொகுதி தேர்தல் முடிவுகளும் காட்டியுள்ளன.

அதேபோல குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் பிரதமர் கனவை ஆட்டம் காணச் செய்யும் வகையில், மன்சா சட்டசபைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தல் முடிவு காட்டியுள்ளது. இந்த தொகுதி மோடியின் கோட்டைகளில் ஒன்றாக கருதப்படுவதாகும். இங்கு தற்போது காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தலுக்குத் தயாராகும் நிலையில் குஜராத் பாஜகவுக்கு இந்தத் தோல்வி நிச்சயம் பின்னடைவுதான்.

1995ம் ஆண்டு முதல் மன்சா தொகுதி பாஜகவிடம்தான் உள்ளது. அப்படிப்பட்ட தொகுதியை காங்கிரஸிடம் பாஜக இழந்திருப்பது மோடி வட்டாரத்தில் கிலியை கிளப்பியுள்ளது. மேலும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் இங்கு காங்கிரஸ் வென்றிருப்பதும் பாஜகவை அதிர்ச்சி அடைய வைகத்துள்ளது.

இப்படித்தான் 2001ம் ஆண்டு நடந்த ஒரு சட்டசபை இடைத் தேர்தலில் பாஜக படு தோல்வி அடைந்தது. இதனால் அப்போது முதல்வராக இருந்த பாஜகவின் கேஷுபாய் படேல் பதவி விலக நேரிட்டது. பின்னர்தான் நரேந்திர மோடி பதவிக்கு வந்தார். அடுத்த பொதுத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றியைப் பெற்றது.

எனவே தற்போதைய இடைத் தேர்தல் தோல்வியை காரணமாக வைத்து மோடிக்கு எதிராக அவரது எதிர்ப்பாளர்கள் கிளம்பலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதேசமயம், காங்கிரஸ் கட்சிக்கு மன்சா வெற்றி பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. குஜராத்தில் செத்துப் போய்க் கிடக்கும் கட்சிக்கு புத்துயிர் கிடைத்தாற் போல அவர்கள் உணர்கின்றனர்.

காங்கிரஸ் கட்சி இப்படி குஜராத்திலும், கர்நாடகத்திலும் சந்தோஷப்பட்டாலும் கூட ஆந்திராவில் அந்தக் கட்சிக்கு மிக பலத்த அடி கிடைத்துள்ளது. ஆந்திராவில் நடந்த சட்டசபை இடைத் தேர்தலில் 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் கேவலமாக தோற்றுப் போயுள்ளது. அதிலும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸிடம் ஒரு தொகுதியில் படு மோசமாக தோற்றுள்ளது காங்கிரஸ்.

இதுபோக மேலும் 18 தொகுதிகளுக்கு விரைவில் அங்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிலும் காங்கிரஸ் மொட்டையடிக்கப்பட்டால் கிரண்குமார் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு கவிழும் நிலை உருவாகும்.

தெலுங்கானா மாநிலம் அமைய வேண்டும் என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் வலியுறுத்தியுள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது. மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு 4 இடங்களில் வெற்றி கிடைத்தது. ஒரு இடத்தில் பாஜகவும், இன்னொரு இடத்தில் ஜெகன் மோகன் ரெட்டி கட்சியும், கடைசி இடத்தில், சுயேச்சை ஒருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

மொத்தத்தில் காங்கிரஸும் சரி, பாஜகவும் சரி, தங்களது அடித்தளத்தை இழக்க ஆரம்பித்துள்ளன, ஆட்டம் காண ஆரம்பித்துள்ளன என்பதையே இந்த இடைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. லோக்சபா தேர்தல் வருவதற்குள் சுதாரித்துக்கொள்வார்களா, சூட்டபிளான கூட்டணியை உருவாக்கிக் கொள்வார்களா என்பதைப் பொறுத்தே அவர்கள் விழுவதும், எழுவதும் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+