2ஜி வழக்கு: விடுக்க கோரும் கனிமொழி மனு- சிபிஐக்கு டெல்லி ஹைகோர்ட் நோட்டீஸ்

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் தி.மு.க. எம்.பி. கனிமொழியின் பெயர் இடம்பெற்று இருந்தது. அதைத் தொடர்ந்து, மே மாதம் அவர் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
6 மாத சிறைவாசத்துக்கு பிறகு, கடந்த நவம்பர் 28ம் தேதி அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவர் மீது சி.பி.ஐ. நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாட்சிகள் விசாரணை நடைபெற்று வருகிறது.
குற்றச்சாட்டு என்ன?
மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தபோது, சுவான் டெலிகாம் நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்சு வழங்கப்பட்டது. அதற்கு பிரதிபலனாக கலைஞர் டி.வி.க்கு பல்வேறு நிறுவனங்கள் வழியாக ரூ.214 கோடி லஞ்சத்தை சுவான் டெலிகாம் நிறுவனம் அனுப்பிவைத்ததாகவும், கலைஞர் டி.வி.க்கு மூளையாக செயல்பட்டவர் கனிமொழி என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இ.பி.கோ. மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விடுவிக்கக் கோரி மனு
இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக்கோரி கனிமொழி டெல்லி உயர்நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு மனுதாக்கல் செய்திருந்தார்.
அதில் கனிமொழி கூறி இருந்ததாவது:
இந்த வழக்கில் நான் தவறாக சிக்கவைக்கப்பட்டுள்ளேன். கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி அனுப்பிவைக்கப்பட்டதாக கூறப்படும் காலத்தில், நான் கலைஞர் டி.வி.யின் பங்குதாரராக மட்டுமே இருந்தேன். அதன் நிர்வாக முடிவுகளில் நான் எந்த பங்கும் வகிக்கவில்லை. கலைஞர் டி.வி.யின் ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் நான் கலந்து கொள்ளவில்லை.
ரூ.214 கோடி பண பரிவர்த்தனை தொடர்பான எந்த ஆவணத்திலும், ஒப்பந்தத்திலும் நான் கையெழுத்திட்டது இல்லை. மேலும், கலைஞர் டி.வி.க்கு வந்த பணம், கடனாக பெறப்பட்ட பணம். அது திருப்பிச் செலுத்தப்பட்டுவிட்டது.
சதித்திட்டம் தொடர்பான சட்டத்தை தவறாக புரிந்து கொண்டதன் அடிப்படையில், என் மீது சி.பி.ஐ. கோர்ட்டு குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது. ஸ்பெக்ட்ரம் லைசென்சை, ஏலத்தில் விற்பது இல்லை என்பது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) பரிந்துரைப்படி எடுக்கப்பட்ட முடிவு.
சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதியின் தவறு
அந்த முடிவில் கூட எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. எனவே, என் மீது இ.பி.கோ. 120பி மற்றும் 409 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ததன் மூலம், சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி மாபெரும் தவறு இழைத்து விட்டார்.
ஒரு பைசாகூட லஞ்சம் வாங்கலையே...
ஸ்பெக்ட்ரம் லைசென்சு, அரசின் கொள்கைப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நான் எந்த வகையிலும் சம்பந்தப்படவில்லை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, நான் எந்த வகையிலாவது பலன் அடைந்தேன் என்றோ, ஒரு பைசா லஞ்சப் பணமாவது என் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது என்றோ ஒரு குற்றச்சாட்டும் கிடையாது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா உள்ளிட்டோருடன் சேர்ந்து நான் சதி செய்தேன் என்பதை நிரூபிப்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. லஞ்சம் பெற்றதாக கூறப்படுவதற்கும் ஆதாரம் இல்லை.
ஆகவே, என் மீதான குற்றச்சாட்டுகளையும், குற்றப்பத்திரிகையையும் ரத்து செய்வதோடு, அதன் அடிப்படையில் நடைபெற்று வரும் சாட்சிகள் விசாரணையையும் ரத்து செய்ய வேண்டும். என்னை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கனிமொழி கூறியிருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து விளக்கம் கேட்டு சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications