தெலுங்கானா விவகாரம்: மத்திய அரசைக் கண்டித்து 10 மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டம்
ஹைதராபாத்: தெலுங்கானா தனிமாநிலத்தை அமைக்கக் கோரி 10 மாவட்டங்களில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தெலுங்கானா தனிமாநிலம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக ஆந்திராவில் தீக்குளிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தெலுங்கானாவில் உள்ள 10 மாவட்டங்களிலும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன.
ஆனால் 10ம் வகுப்பு மாணவர்களின் தேர்வுக்காக அரசுப் போக்குவரத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஹைதராபாத் நகரில் சில இடங்களில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இப்போராட்டத்திற்கு தெலுங்கானா கூட்டு நடவடிக்கைக் குழு, தெலுங்கானா பகுதி காங்கிரஸ் கட்சி, தெலுங்கு தேசம் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்துள்ளன.
தீக்குளிப்பு சம்பவங்களால் தெலுங்கானா விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அண்மையில் நடைபெற்ற பேரவை இடைத்தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தான் போட்டியிட்ட 5 இடங்களில் 4ல் வென்றதால் அக்கட்சி தெலுங்கானா தனிமாநிலம் பெற்றுத்தர வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது.
நாடாளுமன்றத்திலும் தெலுங்கானா விவகாரம் இன்று 2வது நாளாக எதிரொலித்தது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் தெலுங்கானா கோரி கோஷங்கள் எழுப்பினர். அன்னா ஹசாரே குழுவுக்கு எதிராக ஐக்கிய ஜனதா தளத்தினரும் கோஷமிட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications