ஐ.நா. தீர்மானத்திற்கு கட்டுப்பட மாட்டோம்: இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் பெய்ரீஸ்

இலங்கையில் நடந்த இறுதி கட்டப்போரின்போது நடந்த மனித உரிமை மீறல்களை கண்டித்து அந்நாட்டுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றது. இலங்கைக்கு சீனா, ரஷ்யா உள்பட வெறும் 15 நாடுகளே ஆதரவளித்தன. கடந்த 22ம் தேதி கொண்டு வரப்பட்ட இத்தீர்மானத்திற்கு இந்தியா உள்பட 24 நாடுகள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தன. இந்நிலையில் இத்தீரமானத்திற்கு கட்டுப்படப்போவதில்லை என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்திற்கு கட்டுப்படப்போவதில்லை என்று முடிவு செய்திருக்கிறோம். அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. இந்த தீர்மானம் இலங்கையின் இறையாண்மையில் தலையிடுவதாக நாங்கள் நினைக்கிறோம். மேலும் இத்தீர்மானத்தின் மூலம் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க முடியாது. இது ஒன்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கொண்டு வந்த தீர்மானம் அன்று என்றார்.
யாருக்கும் அதிகாரமில்லை..மகிந்த சமரசிங்கே:
இந்நிலையில் இலங்கை விஷயத்தில் தலையிடும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்று அந்நாட்டு அமைச்சர் மகிந்த சமரசிங்கே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் எங்கள் உடன்பாடின்றி எங்கள் நாட்டு விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் யாருக்கும் இல்லை. ஏன் மனித உரிமை ஆணையருக்கு கூட அந்த அதிகாரம் இல்லை. ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு எதிர்க்கிறது. அதை நடைமுறைப்படுத்த எங்கள் அரசு எந்த வழியையும் ஏற்படுத்திக் கொடுக்காது என்றார்.












Click it and Unblock the Notifications