வால்பாறை குடியிருப்புக்குள் யானைகள் நுழைவதை தடுக்க ரூ.2.22 கோடியில் புதிய திட்டம்
சென்னை: காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வால்பாறை பகுதியில் ரூ.2 கோடியே 22 லட்சம் செலவில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
மக்கள் தொகை பெருக்கத்தாலும், தொழில் மயமாக்கலாலும் விலங்குகளின் இயற்கை வாழ்விடங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உணவு, நீர் மற்றும் வாழ்விடம் ஆகியவற்றிற்காக வன விலங்குகள் இடம் பெயர்ந்து, மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் நுழைவதால் மனிதர்கள் வன விலங்குகளை எதிர்கொள்ளும் சூழ்நிலை ஏற்படுகிறது.
இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் விலங்குகளின் வாழ்விடங்களை மேம்படுத்துவது, அவை விரும்பி உண்ணும் பயிர்களை காட்டுப் பகுதிகளிலேயே வளர்ப்பது, காடுகளின் எல்லை ஓரமாக தடைகளை அமைப்பது, கிராம மக்களின் திறனை மேம்படுத்துவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மனித உயிருக்கும், விவசாய பயிர்களுக்கும், உடமைகளுக்கும், விலங்குகளால் ஏற்படும் பாதிப்பிற்கு உடனடியாக இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட பல்முனை அம்சங்களை உள்ளடக்கிய செயல் திட்டத்தை அமல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டதன் அடிப்படையில் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக கோவை மாவட்டத்தில் யானைகள் தடுப்பு அகழிகள் அமைக்க ரூ. 4 கோடியே 30 லட்சத்து 25 ஆயிரம் நிதியை ஒதுக்கி ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக தர்மபுரி, ஈரோடு, திண்டுக்கல் மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் யானைகள் தடுப்பு அகழிகள் அமைக்கவும் மற்றும் பல்வேறு பணிகளை நடைமுறைப்படுத்தவும், தர்மபுரி வன மண்டலத்திற்கு ரூ.2 கோடியே 20 லட்சத்து 59 ஆயிரமும், ஈரோடு வன மண்டலத்திற்கு ரூ.2 கோடியே 14 லட்சத்து 12 ஆயிரமும், திண்டுக்கல் வன மண்டலத்திற்கு ரூ.50 லட்சத்து 15 ஆயிரமும், நெல்லை வன மண்டலத்திற்கு ரூ.34 லட்சத்து 30 ஆயிரமும் ஆக மொத்தம் ரூ.5 கோடியே 19 லட்சத்து 16 ஆயிரம் நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே ஆணையிட்டுள்ளார்.
தற்போது 3வது கட்டமாக வால்பாறை பகுதியில் தடுப்பு குழிகள் அமைத்தல், எச்சரிக்கை மணி ஒலிக்கும் வசதி ஏற்படுத்துதல், யானைகள் விரும்பி உண்ணும் பயிர்களை வளர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.2 கோடியே 22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications