இந்தோனேசியாவில் பறவைக் காய்ச்சல்: இதுவரை 6 பேர் பலி
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பறவைக் காய்ச்சலுக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உலக நாடுகளை அச்சுறுத்திய பறவைக் காய்ச்சல் மீண்டும் தலைகாட்டத் தொடங்கியுள்ளது. இந்தோனேசியாவில் கடந்த பிப்ரவரி 28ம் தேதி காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 17 வயது கட்டுமானத் தொழிலாளி ஒருவர் 5 நாட்கள் கழித்து மார்ச் 9ம் தேதி உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. ஆய்வக பரிசோதனையில் அவருக்கு பறவைக் காய்ச்சல் தாக்குதல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதையடுத்து பறவைக் காய்ச்சலுக்கு இந்த ஆண்டில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 6க உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 2003ம் ஆண்டு மட்டும் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கி 155 பேர் உயிரிழந்தனர் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
பறவைகளைத் தாக்கும் வைரஸில் இருந்து மனிதர்களை நேரடியாக தாக்கும் வைரஸ் மூலம் பறவைக் காய்ச்சல் ஏற்படுகிறது. சாதாரண காய்ச்சலாக தொடங்கி தொண்டையில் புண், உடல் வலி, இருமல், கண் நோய் போன்றவற்றை ஏற்படுத்தும் இது இறுதியில் மனித உயிர்களை பறித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications