தொண்டரை பளார் பளார் என அறைந்த விஜய்காந்த்தின் லட்சணம் தெரியாதா?: ஜெயலலிதா

சட்டமன்றத்தில் இன்று பட்ஜெட் மீது நடந்த விவாத விவரம்:
பாண்டியராஜன் (தேமுதிக): எங்கள் தலைவர் விஜயகாந்த் கடைக்கோடி தொண்டரையும் காப்பாற்றும் தலைவர்.
முதல்வர் ஜெயலலிதா (குறுக்கிட்டு): கட்சித் தொண்டரை அவர் பளார் பளார் என அறைந்து, அது தொலைக்காட்சியிலும் வெளியானது. இதுதான் கடைக்கோடி தொண்டரையும் காப்பாற்றும் லட்சணமா?.
(இதற்கு தேமுதிக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து கோஷம் எழுப்பினர்)
அமைச்சர் முனுசாமி: தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் அவரது கட்சி தொண்டரை அடித்து உதைத்த காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த அவையில் கூட அவர் நாக்கை துருத்திக் கொண்டு அடிக்கப் பாய்ந்தது எல்லோருக்கும் தெரியும். பொது வாழ்க்கையில் இருக்கும் ஒருவர் பொது இடத்தில் யாரை அடித்தாலும் அது தவறு இல்லையா?
(அப்போதும் தேமுதிகவினர் எழுந்து கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்).
சபாநாயகர் ஜெயக்குமார்: அவர் அடித்தாரா? இல்லையா? அதை உலகமே பார்த்தது.
இதற்கு பதிலளித்து பாண்டியராஜன் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து ஒரு கருத்தைக் கூற, அதை அவைக் குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கினார் (அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தையை ஊடகங்கள் வெளியிடக் கூடாது)
அமைச்சர் செங்கோட்டையன்: எங்கள் தலைவியிடம் ஆசி பெறுவது தவறல்ல. அது வேறு, தொண்டர்களை அடிப்பது வேறு.
அமைச்சர் வைத்திலிங்கம்: தேமுதிகவினர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்ல யோக்கியதை இல்லை. அவர் கறுப்பு எம்.ஜி.ஆராம். தமிழ்நாட்டில் ஒரே எம்.ஜி.ஆர். எங்களது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தான். அந்தக் கட்சி தலைவருக்கு யார் தலைமையில் திருமணம் நடந்தது? (விஜய்காந்தின் திருமணம் திமுக தலைவர் கருணாநிதி-காங் தலைவர் மூப்பனார் தலைமையில் நடந்தது நினைவுகூறத்தக்கது)
(வைத்தியலிங்கத்தின் பேச்சுக்கு தேமுதிகவினர் மீண்டும் எதிர்ப்புத் தெரிவித்தனர்)
பண்ருட்டி ராமச்சந்திரன் (தேமுதிக): புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கோவிலைப் போன்றவர். அவரை யாரும் கும்பிடலாம்.
அமைச்சர் முனுசாமி: எதிர்க்கட்சி துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் போல அதிமுக தொண்டர்கள் தலைமையை மாற்றுபவர்கள் அல்ல. காமராஜரை நாங்கள் தலைவராக ஏற்க முடியாது. ஏன் என்றால் அவர் காங்கிரஸ்காரர். இந்த இயக்கத்தை ஏற்படுத்தியவர் எம்.ஜி.ஆர். அதை கட்டிக் காப்பவர் புரட்சித் தலைவி. அவர்கள்தான் எங்கள் தலைவர். எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் கடுமையான வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். காந்தி, பெரியார் போன்றவர்கள் கட்சி நடத்தவில்லை. அவர்கள் எல்லோருக்கும் பொதுவானவர்கள். இந்த இயக்கத்தை உருவாக்கிய எம்.ஜி.ஆரை பொது என்று எப்படி சொல்ல முடியும். அவர் எங்கள் தலைவர். எதிர்க்கட்சி துணைத்தலைவர் இந்த இயக்கத்தை காட்டி கொடுத்து விட்டு சென்றவர்.
பண்ருட்டி ராமச்சந்திரன்: விவாதத்தில் ஒளி ஏற்றுவதற்கு பதிலாக அமைச்சர் சூடு ஏற்றுகிறார். மக்களுக்காக வாழ்ந்த நல்லவர்களை அனைவரும் ஏற்பது பொதுவானது. அவர்கள் கட்சிக்கு எம்.ஜி.ஆரை தலைவர் என்று சொல்வதில் ஆட்சேபனை இல்லை. தலைவர்கள் மறைந்து வரலாறு ஆகி விட்ட பிறகு அவர்களை விவாதப் பொருள் ஆக்கக்கூடாது.
இவ்வாறு விவாதம் நடந்தது.












Click it and Unblock the Notifications