For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்சியில் திமுகவினர் பெரும் வன்முறை- பிரேதப் பரிசோதனைக் கூடத்தை சூறையாடினர்!

Google Oneindia Tamil News

Ramajeyam
திருச்சி: ராமஜெயம் கொலையால் கடும் ஆத்திரமடைந்த திமுகவினர், திருச்சி அரசு மருத்துவமனையில் புகுந்து அங்கிருந்த பிரேதப் பரிசோதனைக் கூடத்தைத் தாக்கி சூறையாடினர். போலீஸார் மீதும் சரமாரியாக கற்களை வீசித் தாக்கினர். சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்தையும் சீர்குலைத்தனர்.

கே.என்.நேருவின் தம்பியான ராமஜெயம் நேற்று காலை வாக்கிங் சென்றபோது காரில் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உயிரற்ற அவரது உடலை திருவளர்ச்சோலை என்ற இடத்தில் வைத்து போலீஸார் மீட்டனர்.

ராமஜெயம் கொலையான தகவல் பரவியதும் திமுகவினர் ஆயிரக்கணக்கில் கார்கள், வேன்கள், ஆட்டோக்களில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர். இதனால் அந்தப் பகுதியே பெரும் வன்முறைக் களமாக மாறியது. சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் சாலை தடுப்புகளை தூக்கி வீசினர். கண்ணில் பட்ட பொருட்களை அடித்து உடைத்தனர்.

ராமஜெயத்தின் உடலை தாங்கிய ஆம்புலன்ஸ் வேன் மருத்துவமனைக்குள் நுழைந்தபோது திமுகவினர் திமுதிமுவென திரண்டு வந்து வேனை சூழ்ந்தனர். பின்னர் உடலை ஊழியர்கள் உள்ளே கொண்டு சென்றபோது ராமஜெயத்தின் முகத்தைப் பார்க்க அவர்கள் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஊழியர்கள், பிரேதப் பரிசோதனைக் கூடத்திற்குள் உடலைக் கொண்டு சென்று வைத்தனர்.

இதையடுத்து திமுகவினரும் உள்ளே புகுந்தனர். அவர்களைப் போலீஸாரால் தடுக்க முடியவில்லை. தடுத்த போலீஸாரையும் திமுகவினர் தாக்கப் பாய்ந்தனர். இதனால் போலீஸார் பின்வாங்கினர். உள்ளே புகுந்த திமுகவினர் பிரேதப் பரிசோதனைக் கூடத்தை அடித்து உடைத்து சூறையாடினர். போர்டுகளை அடித்து உடைத்தனர். உள்ளே இருந்த பொருட்களையும் சூறையாடினர்.

பத்திரிக்கை புகைப்படக்காரர்களையும் கூட அவர்கள் விடவில்லை. ஒருவரின் கேமராவைப் பறித்து உடைத்தனர். இன்னொரு வீடியோ கிராபரையும் தாக்கி படம் எடுக்க விடாமல் தடுத்தனர்.

இத்தனை அமளிகளுக்கு மத்தியில் சென்னையிலிருந்து கார் மூலம் நேரு பிற்பகல் வாக்கில் மருத்துவமனைக்கு வந்தார். பிரேதப் பரிசோதனைக் கூடத்திற்கு வந்த அவர் ராமஜெயத்தின் உடலைப் பார்த்து கதறி அழுதார். பின்னர் தில்லைநகரில் உள்ள தனது வீட்டுக்குப் புறப்பட்டுப் போனார்.

பின்னர் பிரேதப் பரிசோதனை முடிந்ததும் ராமஜெயத்தின் உடல் ஒப்படைக்கபப்ட்டது. உடலை ஊர்வலமாக தில்லைநகருக்கு திமுகவினர் கொண்டு சென்றனர். போகும் வழியில் ஆங்காங்கு கல்வீச்சு, கடைகளை தாக்குவது, வாகனங்களை அடித்து தாக்குதல் போன்றவை நடந்தேறின.

உடல் ஊர்வலம் வந்த பகுதியான புத்தூர், உறையூர், தில்லைநகர், தென்னூர் உள்பட பல பகுதிகளில் திமுகவினரின் வன்முறை காரணமாக கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் எதுவும் ஓடவில்லை. தனியார் பஸ்களும் ஓடவில்லை. ஆட்டோக்களைக் கூட ஓட்ட திமுகவினர் அனுமதிக்கவில்லை. உடல் ஊர்வலம் சென்ற பாதையில் யார் எதிர்பட்டாலும் அவர்களை திமுகவினர் தாக்கினர்.

ராமெஜயத்தின் உடலுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். விமானம் மூலம் திருச்சி வந்த அவர் தில்லைநகரில் உள்ள வீட்டுக்குச் சென்று ராமஜெயத்தின் உடலுக்கு மலர் வளையம் வைத்தார். பின்னர் கே.என்.நேரு மற்றும் ராமஜெயத்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். சிறிது நேரம் அங்கேயே இருந்த ஸ்டாலின் பின்னர் சென்னைக்குக் கிளம்பிச் சென்றார்.

இன்று ராமஜெயத்தின் உடலை தகனம் செய்யவுள்ளனர். முற்பகல் 11 மணியளழில் உடலை ஊர்வலமாக கொண்டு சென்று, ஓயாமரி சுடுகாட்டில் தகனம் செய்கின்றனர்.

இறுதி ஊர்வலத்தின்போது திமுகவினர் பெரும் வன்முறையில் ஈடுபடலாம், குறிப்பாக அதிமுகவினருக்குச் சொந்தமான நிறுவனங்கள், கடைகள், பஸ்கள் உள்ளிட்டவற்றின் மீது தாக்குதல் நடத்தலாம் என சந்தேகிக்கப்படுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று திருச்சியில் பல பள்ளிகள், பாதியிலேயே மூடப்பட்டன. இன்றும் பல பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். திமுகவினரால் வன்முறை ஏற்பட்டு பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதேபோல இறுதி ஊர்வல நேரத்தில் பஸ்களும் ஓடாது என்று தெரிகிறது.

English summary
DMK men indulged in violence in Trichy after Ramajeyam was murdered. They attacked the policemen and media persons in the GH campus. Many buses, shops, autos were attacked.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X