5 மாநில தேர்தல் தோல்வி எதிரொலி-காங். நிர்வாகிகளை கூண்டோடு மாற்ற சோனியா முடிவு

Subscribe to Oneindia Tamil

Sonia Gandhi
டெல்லி: ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களை அடுத்து காங்கிரஸ் கட்சியில் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதிக்கு முன்பாக, தேசிய பொதுச் செயலர்கள், மாநில கமிட்டிகளை மாற்றுவது குறித்தும் அவர் பரிசீலித்து வருவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அண்மையில் நடந்து முடிந்த உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. மணிப்பூர், உத்தரகண்ட் சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றி அக்கட்சிக்கு ஆறுதல் அளித்துள்ளது என்றாலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உத்தரப் பிரதேசத்தில் தோல்வியைத் தழுவிய அதிர்ச்சியிலிருந்து காங்கிரஸ் கட்சி இன்னும் மீளவில்லை.

தீவிர ஆலோசனை

இதை உறுதிப்படுத்தும் வகையில், கட்சியின் மூத்த தலைவர்களான பிரணாப் முகர்ஜி, ஏ.கே. அந்தோனி ஆகியோரிடம் சோனியா காந்தி கடந்த வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார். பலவீனமாக உள்ள கட்சி நிர்வாகிகளை நீக்கிவிட்டு கட்சிக்குப் புத்துயிரூட்ட வேண்டும் என்று அப்போது ஆலோசித்ததாகத் தெரிகிறது.

இதன் தொடர்ச்சியாக, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலையில், தனது இல்லத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளான மோதிலால் வோரா, ஜனார்தன் துவிவேதி, அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோருடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். சுமார் மூன்று மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது.

புதிய பிரச்சார உத்தி

காங்கிரஸ் கட்சியில் ஏற்கெனவே குலாம் நபி ஆசாத், வீரப்ப மொய்லி, முகுல் வாஸ்னிக், ஆகியோர் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பதவியைத் துறந்து முழு நேரக் கட்சிப் பணியில் ஈடுபட ஆர்வம் தெரிவித்துள்ளனர். அது குறித்து மூத்த நிர்வாகிகளின் கருத்துகளை சோனியா காந்தி கேட்டறிந்ததாகத் தெரிகிறது.

மத்தியிலும் மாநிலங்களிலும் ஆளும் காங்கிரஸ் அரசுகளுக்கு எதிராக அண்ணா ஹசாரே குழு தொடர்ந்து போராடி வருவதை முறியடிக்க, கட்சியின் பிரசார குழுவை மாற்றியமைத்து, புதிய பிரசார உத்திகளை மேற்கொள்வது குறித்து அகமது படேல் தயாரித்த அறிக்கை ஒன்றும் சோனியாவிடம் கொடுக்கப்பட்டது.

செயல்படாத குழுக்கள்

கட்சியின் செயல் திட்டங்களை மக்களிடம் விளக்குவதற்காக "சிந்தன் ஷிவிர்' (சிந்தனைக் கருத்தாய்வுக் கூட்டம்) நடத்த வேண்டும் என்று ஓராண்டுக்கு முன்பே சோனியா காந்தி யோசனை தெரிவித்திருந்தார். அதை இன்று வரை நடைமுறைப்படுத்தாதது குறித்தும் மோதிலால் வோராவிடம் சோனியா காந்தி பேசியதாகத் தெரிகிறது. இதேபோல், கட்சியில் "விசார் விபாக்' (ஆலோசனைக் குழு) மூத்த உறுப்பினரான கிரிஜா வியாஸ் தலைமையில் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால், ஒரு முறை கூட அந்தக் குழு கூடியதில்லை. இது குறித்து சோனியா காந்தியின் கவனத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலர் ஜனார்தன் துவிவேதி கொண்டு சென்றதாகத் தெரிகிறது.

மாநில கமிட்டி தலைவர்கள்

மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்ட காந்திலால் பூரியாவுக்கு எதிராக உள்கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். குஜராத் மாநிலத்தில் தீவிரமாகப் பணியாற்றும் செயல் வீரர்கள் இருந்தும் அந்த மாநிலத்துக்கு மத்திய அமைச்சரவையில் போதுமான பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என்று மாநில காங்கிரஸôர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பீகார் சட்டப் பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வி அடைந்த பிறகு அந்த மாநில காங்கிரஸூக்குப் புதிய தலைமையை நியமிக்க வேண்டும் என்ற தொண்டர்களின் கோரிக்கையை காங்கிரஸ் மேலிடம் பொருட்படுத்தவில்லை.

உத்தரப்பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தல் தோல்வியையடுத்து மாநிலத் தலைவர் பதவியை ரீட்டா பகுகுணா பதவி விலகினார்.புதிய தலைவர் நியமனத்தில் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று தொண்டர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இவை குறித்தும் சோனியா காந்தியிடம் அகமது படேல் எடுத்துக் கூறியுள்ளார்.

இதையடுத்து, பலவீனமாக உள்ள மாநில கமிட்டிகளைக் கலைக்கவும், அந்த மாநிலங்களுக்கான மேலிடப் பொறுப்பாளர்களை நியமிக்கவும் சோனியா காந்தி முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக வரும் வாரத்தில் மூத்த தலைவர்களுடன் மீண்டும் பேச அவர் திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி ஏப்ரல் 24 முதல் மே 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக காங்கிரஸ் நிர்வாகிகள், மேலிடப் பொறுப்பாளர்களின் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+