'ஆத்தா, மீ்னாட்சி சத்தியமா வெட்டுவேன்'..பாஜக செயலாளரை மெயிலில் மிரட்டிய பெண்!
திருவாரூர்: மதுரை மீனாட்சி அம்மன் சத்தியமாக உன்னை வெட்டிக் கொலை செய்வேன் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் முருகானந்தத்திற்கு ஒரு பெண் இமெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பாகியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை அருகே உள்ள ஜாம்பவானோடையைச் சேர்ந்தவர் கருப்பு முருகானந்தம் ( 45). பாஜக மாநில பொதுச் செயலாளர். கட்சி விஷயம் தொடர்பாக அவர் அடிக்கடி வெளியூருக்கு சென்று வருவார். மேலும் அவர் கட்சிப் பணிக்காக இமெயில் முகவரி ஒன்றை வைத்துள்ளார். அந்த முகவரிக்கு வரும் இமெயில்களை தினமும் அவர் பார்ப்பார்.
நேற்று அவருக்கு ஒரு இமெயில் வந்திருந்தது. அதில் உங்கள் ஊருக்கே வந்து உன்னை வெட்டிக் கொலை செய்வேன், முடிந்தால் உன்னை காப்பாற்றிக்கொள். இது மதுரை மீனாட்சியம்மன் மீது ஆணை என்றிருந்தது. அனுப்புனர் முகவிரியில் மோகனப்பிரியா என்ற பெயர் இருந்தது.
இந்த இமெயிலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே இது குறித்து முத்துப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசாரும், சைபர் கிரைம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இமெயிலில் கொலை மிரட்டல் விடுத்த அந்த பெண் யார்? எதற்காக அப்படி செய்தார்? அல்லது பெண் பெயரில் வேறு யாராவது கொலை மிரட்டல் விடுத்துள்ளனரா? என்பது போன்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் முத்துப்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications