உபி காங்கிரசாருடன் ராகுல் ஆலோசனை- தோல்விக்கு மத்திய அமைச்சர்களே காரணம் என புகார்

உத்தரபிரதேச பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 403 இடங்களில் வெறும் 23 இடங்களில் மட்டும் வென்று படுதோல்வி அடைந்தது.
இதைத் தொடர்ந்து தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்பதாக தெரிவித்திருந்த ராகுல் பாடங்களைக் கற்றுக் கொண்டு அடுத்த தேர்தலை சந்திப்போம் என்று கூறியிருந்தார்.
153 பேர்.,..13 கேள்விகள்
இந்நிலையில் முதல் கட்டமாக உத்தரப்பிரதேச பேரவைத் தேர்தலில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தோரிடம் ராகுல் கலந்தாலோசித்தார். தேர்தல் தோல்விக்கான காரணங்களை அவர்களிடம் கேட்டறிந்தார். 2014-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற கீழ்மட்டத்தில் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்று அவர்களில் பெரும்பாலானோர் சுட்டிக் காட்டினர்.
20 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்களின் எண்ணிக்கை 153. இவர்கள் அனைவரிடமும் கட்சி மேலிட ஆதரவு, மாநிலக் கட்சி ஆதரவு எப்படி இருந்தது என்பது போன்ற 13 கேள்விகள் கேட்கப்பட்டு பதில் பெறப்பட்டது. இவர்களை 50 பேர் கொண்ட குழுவாகப் பிரித்து இந்த ஆலோசனை நடத்தப்பட்டது.
கேள்வித்தாளில் உங்களுக்கு வாக்குகள் குறைந்தது ஏன்? மத்திய அமைச்சர்கள் , மூத்த தலைவர்கள், மாநில, மாவட்ட மற்றும் மகளிர் அணி, சேவா தளம் நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு தந்தார்களா? என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
மத்திய அமைச்சர்கள் மீது புகார்
நேற்றைய கூட்டத்தைப் பொறுத்தவரையில் தேர்தல் பிரச்சாரத்தின்போது கட்சி மேலிடத் தலைவர்களின் முரண்பாடான அறிக்கைகளே வாக்காளர்களைப் பெரிதும் குழப்பிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
குறிப்பாக மத்திய அமைச்சர்கள் சல்மான் குர்ஷித், ஜெய்ஸ்வால், பெனிபிரசாத் வர்மா ஆகிய மூவர் மீதுதான் அதிகமான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தனர்.
இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசியதுடன் தேர்தல் ஆணையத்துக்கு சவால்விட்டதும் காங்கிரசாருக்கு சங்கடத்தை உருவாக்கியதாகவும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்கப்படும் என்று ஜெய்ஸ்வால் பேசியதும் வாக்களர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது என்பது தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர்களின் புகார்.
இதில் சல்மான் குர்ஷித்துக்கு தான் ஏகத்துக்கும் எதிர்ப்பு. பேரவைத் தேர்தலில் பரூக்காபாத் தொகுதியில் போட்டியிட்ட அவரது மனைவி ஐந்தாவது இடத்தையே பிடித்ததை சுட்டிக்காட்டி அவர் வாயைத் திறக்காமல் இருந்திருந்தாலே போதும் இன்னும் கூடுதல் இடங்கள் கிடைத்திருக்கும் என்று குமுறிக் கொட்டினர்.
திக்விஜய் சிங் சரியில்லை:
காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக்விஜய் சிங்தான் உத்தரப் பிரதேச மாநிலப் பொறுப்பாளர். ஆனால் வேட்பாளர்களை அவர் சரியாகக் கவனிக்கவில்லை.. வேட்பாளர் பட்டியலை மிகவும் தாமதமாக வெளியிட்டார் என்று அவர் மீதும் புகார் பட்டியல் வாசிக்கப்பட்டது. ஆனால் நேற்றைய கூட்டத்தில் திக்விஜய் சிங் பங்கேற்கவில்லை. அவர் வெளிநாடு சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதேபோல் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களான ஜிதின் பிரசாத், ஆர்.பி.என்.சிங், பிரதீப் ஜெயின் ஆகியோர் மீதும் தோல்வியடைந்த வேட்பாளர்கள் காட்டத்தை வெளிப்படுத்தினர்.
பொதுவாக கட்சி அமைப்பு பலவீனமாக இருப்பதையும் பலரும் சுட்டிக்காட்டினர். மாநில காங்கிரஸில் இருக்கும் பல கோஷ்டிப் பிரிவுகளும் தோல்விக்கு முக்கியக் காரணம் என்று கூறப்பட்டது. மேலும் வேட்பாளர் பட்டியலை தாமதமாக அறிவித்ததும் ஒரு காரணம் என்றும் சிலர் சுட்டிக்காட்டினர். இந்த ஆலோசனைக் கூட்டம் இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது.
இதேபோல் உத்தரப்பிரதேசத்தில் இருந்து சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோரிடமும் ராகுல் தனித்தனியே ஆலோசித்தார்.
தற்போதைய முதல்வர் அகிலேஷ் யாதவின் நிர்வாகத்துக்கு எதிராக போராடுமாறும் கட்சியினரை ராகுல்காந்தி கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications