இலங்கை: காணாமல் போன ஜே.வி.பி. அதிருப்தி தலைவர் பிரேம்குமார் நாடு கடத்தல்
கொழும்பு: ஜே.வி.பியின் அதிருப்திக் குழுவான மக்கள் போராட்ட இயக்கத்தின் தலைவர் பிரேம்குமார் குணரத்னத்தை ஆஸ்திரேலியாவுக்கு இலங்கை அரசு நாடு கடத்தியுள்ளது.
பிரேம்குமார் குணரத்தினம் யார்?
ஜே.வி.பியின் தலைவர் ரோஹன விஜயவீராவின் மறைவுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் பிரேம்குமார் குணரத்னம் வசித்து வந்தார். அவரது மனைவிபெயர் சம்பா சோமரத்னம்.
இவரத் தந்தை தமிழர். தாயார் சிங்களவர். தமிழில் சரளமாக பேசினாலும் எழுதப் படிக்கத் தெரியாது. சிங்களம் சரளமாக பேச எழுதக் கூடியவர்.
சிங்கள தேசியவாதத்தை முன்வைக்கும் ஜே.வி.பியின் அண்மைக்கால நடவடிக்கைகள் அந்த கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போதைய தலைவர் சோமவன்ச அமரசிங்க மற்றும் கட்சி தலைவர்கள் மீதான அதிருப்தியில் இருந்தவர்கள் கடந்த டிசம்பர் மாதம் அக்கட்சியிலிருந்து வெளியேறி மக்கள் போராட்ட இயக்கத்தைத் தொடங்கினர்.
யாழ்ப்பாணத்தில் இந்த இயக்கத்தின் சார்பில் 2 முறை போராட்டம் நடைபெற்றது. தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை ஆதரித்த இந்த புதிய இயக்கம் தமிழ் இளைஞர்களை ஈர்க்கவும் செய்தது.
முன்னணி சோசலிஷக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்குவதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட இருந்தார்.
கடத்தல்
இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று அதிகாலை திடீரென பிரேம்குமார் குணரத்தினமும் கட்சியின் பெண் தலைவர்களில் ஒருவரான திமுது ஆட்டிகலவும் திடீரென காணாமல்போயினர்.
காணாமல்போன பிரேம்குமார் குணரத்தினம் ஆஸ்திரேலிய குடியுரிமையும் பெற்றவர் என்பதால் அந்நாட்டு அரசாங்கத்திடம் குமாரின் மனைவி புகார்மனு கொடுத்திருந்தார். இதையடுத்து பிரேம்குமார் எங்கே என்று ஆஸ்திரேலியா கேள்வி எழுப்பியது. கொழும்பில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகம் இவ்விவகாரத்தில் இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது.
அசராத இலங்கை
பிரேம்குமார் குணரத்தினம் என்ற பெயரில் எவரும் தங்கள் நாட்டுக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து வரவில்லை என்று முதலில் இலங்கை அரசு கூறிவந்தது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில் குணரத்னம் கடத்தல் முடிவுக்கு வந்தது.
அவர் போலிசில் சரணடைந்திருப்பதாகவும் அவரை ஆஸ்திரேலியாவுக்கு திருப்பி அனுப்பப் போவதாகவும் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே தெரிவித்திருந்தார்.
நாடு கடத்தல்
இதைத் தொடர்ந்து இன்று காலை பிரேம்குமார் குணரத்னம் என்ற நொவெல் முதலிகே இன்று காலை 7.56 மணிக்கு யு.எல்.314 என்ற விமானத்தின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் ஆஸ்திரேலியா செல்லும்போது இலங்கை விமான நிலையத்தில் எராள்மான குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல் பிரேம்குமார் குணரத்னத்துடன் காணாமல்போன திமுது ஆட்டிகலவும் அவரது கட்சி அலுவலகம் அருகே மர்ம நபர்களால் இறக்கிவிடப்பட்டுள்ளார்.
கடத்தியது யார்?
இந்தக் கடத்தலை இலங்கை ராணுவத்தினர் மேற்கொண்டனரா? அல்லது துணை ராணுவக் குழுவினர் மேற்கொண்டனரா? என்பது இன்னமும் தெளிவாகவில்லை.












Click it and Unblock the Notifications