ஸ்டாலின்- வீரபாண்டி ஆறுமுகம் மோதல் வலுக்கிறது- கருணாநிதியிடம் புகார்!

Subscribe to Oneindia Tamil

Stalin and Veerapandi Arumugam
சென்னை: அதிமுக உறுப்பினராக இருப்பவர்கள் எல்லம் திமுக இளைஞர் அணி நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதியிடம் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் புகார் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இது திமுக பொருளாளர் ஸ்டாலின் மீது அவர் தந்துள்ள புகாராகவே கருதப்படுகிறது.

மாநிலம் முழுவதும் இளைஞர் அணிக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து வருகிறார் ஸ்டாலின். முன்பு மாவட்டச் செயலாளர்கள் சொன்னவர்களே இளைஞரணி நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர். ஆனால், அதை மாற்றி தானே மாவட்டந்தோறும் சென்று நேர்காணல் நடத்தி இளைஞரணிக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து வருகிறார் ஸ்டாலின்.

இளைஞர்களே அந்த அணியில் இருக்க வேண்டும், வயதானவர்கள் கூடாது என்பதில் தீவிரமாக உள்ள ஸ்டாலின் கல்விச் சான்றிதழ்களை சரிபார்த்துவிட்டே நிர்வாகிகளை தேர்வு செய்து வருகிறார்.

இந்த விஷயத்தில் முன்னாள் அமைச்சர், மாவட்டச் செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சியின் முக்கியத் தலைவர்கள், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆகியோரின் பரிந்துரைகள் எதையும் ஸ்டாலின் ஏற்கவில்லை. இதனால் ஸ்டாலின் மீது சேலம் மாவட்டச் செயலாளர் வீரபாண்டி ஆறுமுகம், அழகிரி ஆகியோர் கடுப்பில் உள்ளனர்.

இந் நிலையில் இளைஞர் அணி நிர்வாகிகள் தேர்வு தொடர்பாக மதுரையிலும், சேலத்திலும் பெரும் பிரச்சனை எழுந்தது.

ஸ்டாலின் வருவதற்கு முன்பே இளைஞரணிக்கு நிர்வாகிகளைத் தேர்வு செய்யவும் வீரபாண்டி ஆறுமுகம் முயன்றார். கட்சித் தலைமையின் எச்சரிக்கையால் அதை கைவிட்டார். அதே போல இளைஞரணிக்கு நிர்வாகிகளைத் தேர்வு செய்ய ஸ்டாலின் மதுரை வந்தபோது, அழகிரி அங்கிருந்து வெளியேறி சென்னை சென்றுவிட்டார்.

மேலும் தனது ஆதரவாளர்கள் யாரும் ஸ்டாலினின் நேர்காணலிலோ, பொதுக் கூட்டத்திலோ பங்கேற்கவும் தடை விதித்தார். இதனால் மதுரை நகர் மாவட்டச் செயலாளர் தளபதி தவிர வேறு எந்த கட்சிப் பிரமுகரும் ஸ்டாலின் நடத்திய நேர்காணலில் பங்கேற்கவில்லை.

இந்தப் பிரச்சனையில் தளபதியையே கூட ராஜினாமா செய்யுமாறு அழகிரி தரப்பு நெருக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. ஸ்டாலின் கூட்டத்துக் போய் அழகிரிக்கு எதிரியாகிவிட்ட தளபதி கடும் வெறுப்பில் உள்ளார்.

தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருக்கும் மு.க.அழகிரியை கலந்து ஆலோசிக்காமல், மதுரையில் இளைஞரணி நேர்காணலையும், பொதுக் கூட்டத்தையும் ஸ்டாலின் நடத்தியதாகவும், திமுக தலைவர் கருணாநிதி வருவதாக இருந்தால்கூட மாவட்டச் செயலாளரை கலந்து ஆலோசித்த பிறகே வரவேண்டும் என்பது திமுகவில் எழுதப்படாத விதியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும், அதை ஸ்டாலின் மீறியதால் தான் அவரை மதுரை திமுகவினர் புறக்கணித்ததாகவும் அழகிரி ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இந் நிலையில் மதுரையில் திமுகவினர் ஒட்டுமொத்தமாக தன்னை புறக்கணித்ததால் கடுப்பான ஸ்டாலின், அது குறித்து தலைமையிடம் புகார் கூறியதோடு, கட்சியின் பொருளாளர் பதவியே தனக்குத் தேவையில்லை என்று கூறி வருவதாகவும் தெரிகிறது.

ஸ்டாலின் வெறுப்பால் அதிர்ந்து போன திமுக தலைவர் கருணாநிதி, இது குறித்து விளக்கம் கேட்டு மதுரையின் 15 அழகிரி ஆதரவு நிர்வாகிகளுக்கு திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் மூலமாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந் நிலையில் ஸ்டாலின் தன்னை மதிக்காததால் கடந்த சில காலமாக அழகிரி தரப்புக்கு நெருக்கமாகிவிட்ட வீரபாண்டி ஆறுமுகம், இப்போது நேரடியாக ஸ்டாலினுக்கு எதிராக கட்சித் தலைமையிடமே புகார் கூறியுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.

அந்தக் கூட்டத்தைப் புறக்கணித்த 15-க்கும் மேற்பட்டோருக்கு திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் விளக்கம் கேட்டு புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஆனால், தென் மண்டல அமைப்புச் செயலாளராக மு.க.அழகிரி இருக்கையில், அவரைக் கேட்காமல் அமைப்புச் செயலாளர் எப்படி நோட்டீஸ் அனுப்பலாம் என்று அழகிரியின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

திமுகவைப் பொறுத்தவரை முறையாக அதிகாரம் பெற்ற பொதுச்செயலாளர் க.அன்பழகன்தான் விளக்கம் கேட்க முடியும். அவரை விட்டுவிட்டு இளங்கோவன் மூலமாக நோட்டீஸ் வந்துள்ளதால், அதற்கு பதிலளிக்க வேண்டாம் என அழகிரி கூறிவிட்டதாகத் தெரிகிறது.

இந் நிலையில் சேலத்தில் முட்டல் மோதலுக்குப் பின் கடந்த மார்ச் 6ம் தேதி இளைஞரணி நேர்காணலை நடத்த வந்தார் ஸ்டாலின். அதுவரை முறைத்துக் கொண்டிருந்த வீரபாண்டி ஆறுமுகம், திடீரென ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்ததோடு, எங்களுக்குள் எந்தவிதப் பிரச்சனையும் இல்லை என்று கூறி பத்திரிக்கையாளர்களுக்கு போஸ் கொடுத்தார்.

இந் நிலையில் சேலத்தில் தேர்வு செய்யப்பட்ட புதிய இளைஞரணி நிர்வாகிகள் பட்டியல் கடந்த 11ம் தேதி முரசொலியில் வெளியிடப்பட்டது. இதில் இருந்த பலரும் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு எதிராகச் செயல்பட்டு வரும், மு.க.ஸ்டாலின் ஆதரவாளரான பனமரத்துப்பட்டி ராஜேந்திரனின் ஆதரவாளர்களாகவே அதைக் கண்டு வீரபாண்டி ஆறுமுகம் அதிர்ந்து போனார் என்கிறார்கள். இதைத் தொடர்ந்து தான் வீரபாண்டி ஆறுமுகம் ராஜினாமா என்ற செய்தி பரவியது. ஆனால், அதை ஆறுமுகம் மறுத்தார்.

இதற்கிடையே, புதிய நிர்வாகிகளில் பலர் இப்போதும் அதிமுகவில் உறுப்பினர்களாக உள்ளதாகக் கூறி, அதற்கான ஆதாரங்களையும் திரட்டி அதை அப்படியே கருணாநிதியிடம் கொடுத்துள்ளார் வீரபாண்டி ஆறுமுகம் என்கிறார்கள். இதற்கு ஆதாரமாக அந்த நிர்வாகிகளின் அதிமுக அடையாள அட்டைகளையும் கருணாநிதியிடம் அவர் தந்துள்ளார் என்கிறார்கள்.

இது குறித்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீரபாண்டி ஆறுமுகத்திடம் கருணாநிதி உறுதி அளித்துள்ளாராம்.

இதற்கு ஸ்டாலின் எப்படி 'செக்' வைக்கப் போகிறார் என்பது தான் திமுகவில் அடுத்த எதிர்பார்ப்பு!.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+