கண்மாய், குளங்களில் வண்டல், செம்மண் உள்ளும் உரிமையும் ஆளும்கட்சிக்கு தாரைவார்ப்பு: வைகோ எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிராமங்களில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஊரணிகளில் இருந்து வண்டல் மற்றும் செம்மண் எடுத்து விற்பனை செய்யும் உரிமையை ஆளும் கட்சியினருக்கு தமிழக அரசு வழங்கியுள்ள நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆற்று மணல் கொள்ளை

தமிழகத்தின் ஆற்றுப்படுகையில் ஆளும் கட்சியினர் கணக்கின்றி மணலை அள்ளி விற்பனை செய்து, நமது ஆற்று வளத்தை சூறையாடி வருகிற செயல் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. உயர்நீதிமன்றத்தின் தலையீடு, பொதுமக்களின் விழிப்புணர்வு காரணமாக, பிரதான ஆற்றுப்படுகைகளில், மணல் திருட்டு குறைந்து உள்ளது. எனினும் ஆளும் கட்சிக்கு வருவாய் ஈட்டும் முக்கியத் தொழிலாக சட்டவிரோத மணல் திருட்டு அமைந்து உள்ளதால், பிரதான ஆற்றுப்படுகைகளைத் தவிர்த்து பல சிற்றாறுகள், கால்வரத்துப் பகுதிகள் காட்டாறுகளைத் தேடிக் கண்டுபிடித்து மணல் அள்ளும் பணியில் இப்போது ஆளும் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

குளம், கண்மாய்களுக்கும் ஆபத்து

இவை போதாது என்று தமிழகம் முழுவதிலும் உள்ள பொதுப்பணித்துறை கண்மாய்கள், ஊராட்சி ஒன்றியக் கண்மாய்கள், ஊராட்சிக்கு உட்பட்ட சிற்றூர் குளங்கள், ஊரணிகள் வருவாய்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடங்களில் குவிந்து கிடக்கின்ற வண்டல் மண், செம்மண் இவற்றை ஏகபோகமாக விற்பனை செய்யும் உரிமை ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், ஆளும்கட்சியின் அடிவருடிகளுக்கும் மாவட்ட வாரியாக, தாலுகா வாரியாக, ஊராட்சி வாரியாக பிரித்து வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரியவருகிறது.

ஏழை எளிய விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு வண்டல் மண்ணை உரமாக தத்தமது ஊர்க்கிராமங்களில் உள்ள குளங்கள், கண்மாய்களில் இருந்து எடுத்துப் பயன்படுத்தி வருகின்றனர். 40 யூனிட் வண்டல் மண் இலவசமாக எடுத்து வந்தனர். கூடுதலாக விவசாய நிலத்துக்கு தேவைப்படும் மணலை யூனிட் 1க்கு ரூ.40 வீதம் வருவாய்த்துறை மூலம் பெற்று வந்தனர். இரசாயன உரங்களால் பாழ்பட்டுப்போன விவசாய நிலங்களுக்கு இந்த வண்டல் மண்ணே சத்துள்ள இயற்கை உரமாக விளங்கி வருகிறது.

வண்டல் மணல் கொள்ளை

இதேபோல் குடிசைத் தொழிலாக நடந்து வருகின்ற செங்கல் மற்றும் மண்பாண்டம் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வண்டல் மண் ஒரு வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. அவர்களும் வருவாய் துறையின் ஒப்புதலுடன் வண்டல் மண்ணை மண்வெட்டி மூலம் மிகச் சொற்ப அளவில் எடுத்துப் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், அரசு ஒப்பந்தப் பணிகளுக்கு பின்பற்ற வேண்டிய எல்லா விதிமுறைகளையும் காலில் போட்டு மிதித்துவிட்டு பல்லாயிரம் ஆண்டுகளாக கிராம மக்களின் நேரடிப் பராமரிப்பிலும் அனுபவத்திலும் இருந்து வருகின்ற கண்மாய், குளங்களின் முழு மணல் வளத்தையும் அதிநவீன இராட்சச இயந்திரங்களின் மூலம் அடியோடு சுரண்டி, கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்க ஆளும்கட்சி திட்டமிட்டுள்ளது.

கிராம மணல்கொள்ளையை கைவிடுக!

கண்மாய்கள், குளங்கள் ஆழமாக தோண்டப்பட்டு, பின்னர் நீர் நிரம்பும் காலத்தில் கிராமப்புற குழந்தைகள் ஆழம் தெரியாமல் இறங்கி உயிர் இழப்பிற்கு ஆளாகிற ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. தமிழக அரசின் மிக மோசமான மக்கள் விரோத நடவடிக்கையாகவே விளங்குகிற இச்செயல்பாடுகளை வன்மையாக கண்டிப்பதுடன், கோடிக்கணக்கான விவசாயிகளுக்கும், அந்தந்த பகுதிகளில் குடிசைத் தொழிலில் ஈடுபட்டுள்ள இலட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரமாக இருக்கின்ற கிராமப்புற கண்மாய்கள், குளங்கள் மற்றும் பொது இடங்களில் வண்டல் மண், செம்மண் அள்ளும் உரிமையை தனியாருக்கு தாரைவார்க்கும் (பெரும்பாலும் ஆளும் கட்சியினருக்கு) தமிழக அரசின் முடிவை உடனடியாக கைவிடுமாறு வலியுறுத்துகின்றேன். கிராமப்புற மக்கள் ஒன்றுபட்டு நின்று தங்கள் ஊரின் மணல் வளத்தையும், கண்மாய், குளங்களையும் பாதுகாத்திட விழிப்புணர்வோடு செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+