தமிழ் ஈழம் மலர போராட்டம் நடத்த மீண்டும் டெசோவை உருவாக்க வேண்டும்-கருணாநி

சென்னை பெரவள்ளூரில் நேற்று மாலை தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருணாநிதி பேசியதாவது:
அ.தி.மு.க.விடம் வம்பு சண்டைக்கு போக விரும்பவில்லை. அதற்காக வலிய வரும் சண்டையையும் நாங்கள் விடுவதில்லை.
தி.மு.க. குறிக்கோள்களுடன், லட்சியத்துடனும் தொடங்கப்பட்ட இயக்கம். தி.மு.க.வை அண்ணா ராயபுரத்தில் தொடங்கி வைத்தபோது, இது தமிழர் இயக்கம், தமிழர்களுக்கான இயக்கம் இதை காப்பாற்றும் கடமை இந்த மண்ணில் பிறந்த எல்லோருக்கும் உண்டு என்று எடுத்துரைத்தார். இன்று அவர் இல்லை. அவர் உருவாக்கிய கொள்கை மறையவில்லை. நாம் இருக்கும் வரை அண்ணாவின் கொள்கைகள் மறையாது. மறையவும் விடமாட்டோம்.
எனக்கு 50 ஆண்டுகால சட்டசபை அனுபவம் உள்ளது. இதற்காக சட்டப்பேரவையில் விழா கூட எடுத்தார்கள். சட்டமன்றம் எனக்கு புதியது அல்ல. நான் பயந்து சாகவேண்டிய இடமும் அல்ல.
சட்டமன்றத்தில் எதிர்கட்சிகளை ஏளனம் செய்கிறார்கள். எதிர்கட்சிகளை குண்டு கட்டாக தூக்கி வீசுகிறார்கள். அவைக்கு வரவிடாமல் தடுக்கும் முயற்சிகளையும் பார்க்கிறோம். அண்ணா பெயரால் கட்சி நடத்தினால் மட்டும் போதாது. அண்ணா சொன்னபடி செயல்படவும்வேண்டும்.
நான் முதல்வராக இருந்தபோது என்னைப்பற்றி பாராட்டி பேசவேண்டும் என்று உறுப்பினர்கள் கேட்டால் நான் அதற்கு அந்த விஷயத்தை சொல்லி பாராட்டுங்கள். அதை விட்டுவிட்டு பரந்தாமா போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினால் நான் வெளியே சென்றுவிடுவேன் என்றேன். புகழாரம் எனக்கு பிடிக்காது என்று சபாநாயகரிடமும் கூறினேன். உடனே சபாநாயகர் முதல்வரை யாரும் புகழ்ந்து பேசக்கூடாது என்று உத்தரவிட்டார். இது அவைக்குறிப்பில் இடம்பெற்றுள்ளது. முடிந்தால் படித்து பார்த்து புரிந்து கொள்ளலாம்.
இன்றைக்கு நம்மை சட்டமன்றத்துக்குள் அனுமதிக்காத சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார்கள். அவர்கள் எத்தனை நாளைக்குதான் நம்மை தடுத்துவிடமுடியும்.
ஆட்சி மாறலாம், அப்போது நாங்கள் பதிலுக்கு பதில் செய்யமாட்டோம். எங்களுக்கு பழிவாங்கவும் தெரியாது. நாங்கள் மனிதாபிமானம் உள்ளவர்கள். நாங்கள் பெரியார் வழி வந்தவர்கள். அந்த எண்ணம், அந்த உணர்வு இருக்கும் வரை எங்களை யாராலும் வீழ்த்த முடியாது, அழிக்கமுடியாது.
தமிழ்நாட்டு மக்கள் வாழவேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். அவர்களுக்கான உழைக்கும் எங்கள் உழைப்பு வீணாகப்போய்விடக்கூடாது. நான் 90 வயதை நெருங்கி கொண்டு இருக்கிறேன். எனக்கு இன்னும் எத்தனை ஆண்டுகளோ என்று தெரியாது. வாழவேண்டும் என்றால் உங்கள் உள்ளத்தில் நிறைந்து வாழவேண்டும். பெரியார் வாழவில்லையா? அண்ணா வாழவில்லையா? அதேபோல் வாழவேண்டும்.
இந்த கருணாநிதி உள்ளவரை தமிழுக்காக போரிட்டுக் கொண்டே இருப்பான். என் முழக்கம் முரசொலியாக ஒலித்துக்கொண்டே இருக்கும். இதையாராலும் தடுக்கமுடியாது.
தமிழ் ஈழம் மலராததற்கு காரணம் நிறைய உண்டு. அதுபற்றி ஆராய்ந்து சொல்லவிரும்பவில்லை. தமிழன் தலைநிமிர்ந்து வாழவேண்டும். தமிழ் ஈழத்துக்கு இன்றைய தினம் புதிய எழுச்சியை உருவாக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
நான் முன்பு சொன்னதுபோல் எனக்கு இன்னும் எத்தனை ஆண்டுகளோ தெரியாது. ஆனால் ஈழத்தின் எழுச்சியை உருவாக்காமல், உங்களை மட்டும் அல்ல இந்த உலகத்தை விட்டே போகமாட்டேன். உங்களுக்கு நிறைவேறாத ஆசை உண்டா? என்று பத்திரிகையாளர்கள் என்று கேட்டார்கள். அதற்கு தமிழ் ஈழம் மலரவேண்டும் என்பதே என் ஆசை என்றேன். தமிழ் மலர பாடுபட நாம் அனைவரும் ஒத்துழைக்கவேண்டும். மீண்டும் டெசோவை உருவாக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதில் நானும், பேராசிரியர் அன்பழகன், கி.வீரமணி இடம்பெறுவோம் என்றார் கருணாநிதி.-












Click it and Unblock the Notifications