பசுபதி பாண்டியன் கொலை வழக்கு-நாங்குநேரி கோர்டில் மேலும் ஒருவர் சரண்
தூத்துக்குடி: தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் நாங்குநேரி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் திண்டுக்கல் அருகே உள்ள நந்தவனப்பட்டியில் கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி இரவு மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
கொலை தொடர்பாக சுரண்டை இடையார் தவணையைச் சேர்ந்த ஆறுமுகசாமி, தூத்துக்குடி முள்ளக்காடு அருளானந்தம் உள்பட 10க்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
ஆறுமுகசாமி, அருளானந்தன் ஆகியோரை தாடிகொம்பு போலீசார் காவலில் எடுத்து விசாரித்ததில் முன்விரோதம் காரணமாக தூத்துக்குடி மூலக்கரையைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உத்தரவின் பேரில் பசுபதி பாண்டியனை கொலை செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
சுபாஷ் பண்ணையார், ஆறுமுகச்சாமி, அருளானந்தம், ராஜபாளையத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம், கொலையாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்ட நிர்மலா, கோழி அருள் உள்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நிர்மலா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சுபாஷ் பண்ணையார், கோழி அருள் உள்பட 9 பேரை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
தலைமறைவாக உள்ள கொலையாளிகளை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று காலை தூத்துக்குடியைச் சேர்ந்த ஞானையா மகன் அந்தோணி என்பவர் நாங்குநேரி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுந்தர்ராஜ் முன்னிலையில் சரணடைந்தார். அவரை திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் 2ல் ஆஜர்படுத்த மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் திண்டுக்கல் அழைத்துச் சென்றனர்.


Click it and Unblock the Notifications
