பயிற்சி பெண் டாக்டர்களிடம் பேராசிரியர் ஆபாச பேச்சு: மாணவர்கள் முற்றுகைப் போராட்டம்
நாகர்கோவில்: நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் பேராசிரியராக இருக்கும் டாக்டர் ராமச்சந்திரன் பயிற்சி பெண் டாக்டர்களிடம் ஆபாசமாக பேசியது பற்றி அறிந்த மாணவர்கள் அவரை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் பேராசிரியராக இருப்பவர் ராமச்சந்திரன். அவர் மருத்துவக் கல்லூரியி்ல் வகுப்பு நடத்தும் போதும், வார்டுகளில் வைத்தும் பயிற்சி பெண் டாக்டர்களிடம் ஆபாசமாக பேசுவாராம்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு பெண் பயிற்சி டாக்டரிடம் ஆபாசமாக பேசியுள்ளார். இதில் பேராசிரியர் ராமச்சந்திரனுக்கும், அந்த பயிற்சி பெண் டாக்டருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் ஐ.சி.யு. வார்டில் நோயாளிகளை ராமச்ந்திரன் பார்த்து வந்தார். அப்போது உடன் வந்த பெண் பயிற்சி டாக்டரை ஆபாசமாக கிண்டல் செய்துள்ளார். இது குறித்து அந்த பெண் டாக்டர் சக மாணவ, மாணவிகளிடம் தெரிவித்தார்.
இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த மாணவ, மாணவிகள் திரண்டு வந்து பேராசிரியர் ராமச்சந்திரனை சிறை பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மருத்துவக் கல்லூரி டீன் மோகன்ராம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூறி ராமச்சந்திரனை ஐசியூ வார்டில் இருந்து வெளியே அழைத்து வந்தார். அப்போது மாணவ, மாணவிகள் திரண்டதால் ராமச்சந்திரனை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லாமல் தனது காரில் ஏற்றிக் கொண்டு வெளியே சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதை பார்த்த மாணவ, மாணவிகள் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவரை பத்திரமாக வெளியே அழைத்துச் சென்ற டீ்ன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி டீன் அலுலவகத்தை முற்றுகையிட்டனர். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications
