மதுரை சைக்கிள் வெடிகுண்டு சம்பவத்தின் பின்னணியில் அல் உம்மா?
மதுரை: மதுரையில் சைக்கிளில் வெடிகுண்டு வைத்த சம்பவத்தின் பின்னணியில் அல் உம்மா அமைப்பினர் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து விசாரணையை போலீஸார் தொடர்ந்து முடுக்கி விட்டுள்ளனர்.
மதுரை அண்ணாநகர் ராமர் கோவில் வாசல் பகுதியில் கடந்த சில நாட்களாக அனாதரவாக நின்று கொண்டிருந்த ஒருசைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு நேற்று பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் உயிரிழப்பு ஏதும் இல்லை. இருப்பினும் மதுரை பரபரப்பாகி விட்டது.
ராமர் கோவிலை தகர்க்க நடந்த சதியா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. தனிப்படைகளை அமைத்து போலீஸார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இதற்கிடையே, வெடிகுண்டு சம்பவத்திற்கு என்ன காரணம் இருக்கலாம் என்று போலீஸார் பலவிதங்களில் யோசித்து வருகின்றனர்.
மே 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் மதுரையில் பாஜகவின் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. அத்வானி, நிதின் கத்காரி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் அத்தனை பேரும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். மாநாட்டை சீர்குலைப்பதற்காகவும், மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாமோ என்ற ஒரு சந்தேகம் உள்ளது.
மேலும் அல் உம்மா அமைப்பினரே இதில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகப்படுகிறார்கள். ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அத்வானியின் ரத யாத்திரை தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் நடந்தபோது திருமங்கலம் அருகே அவர் செல்லவிருந்த பாதையில், பாலத்தின் கீழ் வெடிகுண்டு வைக்கப்பட்டு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் அல் உம்மா அமைப்புடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை இன்று வரை போலீஸார் தேடிக் கொண்டுள்ளனர்.
தற்போது நடந்த வெடிகுண்டுச் சம்பவத்திற்கும், தலைமறைவாக உள்ளவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது தெரியவில்லை.
கடந்த ஒன்றரை வருடத்தில் இதுவரை மதுரையில் 4 இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்த சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் ஒரு வழக்கில் கூட முக்கியக் குற்றவாளிகளை போலீஸார் இதுவரைக் கைது செய்யவில்லை. இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸார் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். மாநகர காவல்துறை ஆணையராக சமீபத்தில்தான் சஞ்சய் மாத்தூர் பொறுப்பேற்றார். அதற்குள் ஒரு குண்டுவெடித்துள்ளதால் மாநகர காவல்துறைக்குப் பெரும் தர்மசங்கடமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications