மதுரையில் விரைவில் மிகப் பெரிய மருத்துவ கல்லூரி, சைவ சித்தாதந்த பல்கலை: நித்யானந்தா

மதுரையின் இளைய ஆதீனமாக தேர்வு செய்யப்பட்ட நித்யானந்தாவுக்கு திருவண்ணாமலையில் சனிக்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற விழாவில் பட்டாபிஷேகம் செய்துவைத்தார் மதுரை ஆதீனம். விழாவில் நித்யானந்தா பேசுகையில், மதுரை ஆதீனம் எனக்கு வழங்கியுள்ள இப் பொறுப்பை முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறேன். நான் சீரும், சிறப்புடன் செயல்படுவேன் என்பதை உறுதி அளிக்கிறேன். மதுரை ஆதீனத்துக்கு பாரம்பரியம்தான் இருந்ததே தவிர, அதற்கான அமைப்புகளை ஏற்படுத்தியவர் இப்போதைய மதுரை ஆதீனம்தான்.
எனக்கென்று பகையாளிகள் யாரும் இல்லை. என்னை பகையாளியாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். எனவே, எனக்கு ஆதீனப் பொறுப்பு வழங்கினால், உங்களுக்கு நிறைய பிரச்சனை வரும். வேண்டாம் என்றேன். அதற்கு, ஆதீனம் மிகத் தெளிவாகச் சொன்னார். எந்த நல்ல வேலை செய்தாலும் எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். அதற்காக நான் பயப்படமாட்டேன்.
அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 150 நாடுகளில் கிளைகள் கொண்ட ஆதீனமாக, மதுரை ஆதீனம் மேம்படுத்தப்படும். ஞான சம்பந்தரின் புகழும், ஆதீனத்தின் தத்துவமுமான சைவமும் உலகம் முழுவதும் பரப்பப்படும்.
சைவத்தை வளர்க்க, சைவத்தைப் பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சர்வதேச தரத்திலான நூலகம் ஒன்று மதுரையில் விரைவில் அமைக்கப்படும்.
சைவ சித்தாந்தத்தில் பல இளைஞர்களை வழிநடத்தி, நெறிப்படுத்தி, பயிற்சி அளிக்கும் வகையில் சைவ சித்தாந்தப் பல்கலைக்கழகம் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நிறுவப்படும். சைவ, கலாசார மையமாக மிகப் பெரிய அளவில் மேலும், மேலும் மதுரை ஆதீனம் விரிவுபடுத்தப்படும்.
விரைவில் மதுரை ஆதீனத்துக்காக 100 கிராமங்களில் பள்ளிகள் தொடங்கப்படும். மதுரையில் 100 படுக்கைகள் கொண்ட மிகப் பெரிய மருத்துவமனையும், ஆதீனத்துக்காக மருத்துவக் கல்லூரியும் விரைவில் நிறுவப்படும். பல்வேறு விதமான சேவைகள், ஆதீனத்தின் சைவ சிந்தாந்த கருத்துகள் உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்ப்படும்.
சைவ சித்தாந்தத்தை உலகம் முழுவதும் பரப்பும் வகையில் இணையத்தளம் ஒன்றும் ஆரம்பிக்கப்படும். மதுரை ஆதீனம் நித்தியானந்த பீடத்தைப்போல, உலகம் முழுவதும் பரந்து விரிந்த ஆன்மீக இயக்கமாக விரிவுபடுத்தப்படும்.
இஸ்கான் அமைப்பைப் போல, மதுரை ஆதீனத்தை உலகம் முழுவதும் பரப்பி, ஆயிரக்கணக்கான கோயில்கள் கட்டப்படும். இதன் மூலம், திருஞானசம்பந்தரின் புகழ் பரப்பப்படும். அந்த வகையில் மதுரை ஆதீனத்தை உருவாக்கியே தீருவோம். இது நான் எடுத்துக்கொள்ளும் உறுதி.
மதுரை ஆதீனமாகப் பொறுப்பேற்றுள்ள எனக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவிப்பதாகச் சொல்கிறார்கள். அவையெல்லாம் இந்து அமைப்புகளே அல்ல. அடிப்படை ஆதாரம் இல்லாத புகாரை நீதிமன்றத்தில் சொல்கிறார்கள். அவர்கள் மீது நான் வழக்குத் தொடர உள்ளேன்.
ஆதீன சொத்துகளை அபகரிக்க முயற்சிக்கும் ஒரு தரப்பும் எனக்கு எதிராகப் பணத்தைக் கொட்டி அவதூறு பரப்பி வருகின்றனர்.
என்னுடைய எந்த விளக்கத்தையும் கேட்காமல், எனக்கு எதிராக சிலர் திரண்டு என்னை குற்றவாளியாக பாவித்து, சைவம் தெரியாதவர் என்று சொல்கின்றனர் என்றார் நித்யானந்தர்.












Click it and Unblock the Notifications