காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதியூரப்பா திடீர் புகழாரம்- கர்நாடகத்தில் அதிகரிக்கும் டென்ஷன்
பெங்களூர்: கர்நாடக பாரதிய ஜனதா கட்சி பிளவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் நிலையில் போர்க்கொடி தூக்கியிருக்கும் முன்னாள் முதல்வர் எதியூரப்பாவோ, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ஆஹா ஓஹோவென புகழாரம் சூட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சோனியா காந்தி பற்றி எதியூரப்பா கூறியுள்ளதாவது:
நான் சோனியா காந்தியை புகழ்வேன். ஏனெனில் தும்கூருக்கு சித்தகங்கா மடத்துக்கு அவர் வந்தபோது அனைத்து காங்கிரஸாரும் ஒற்றுமையாக நின்றனர். அந்தக் கட்சியில் கட்சி உறுப்பினர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உதவி பிரச்சனைக்குத் தீர்வு காண்கின்றனர்.
ஆனால் பாரதிய ஜனதா கட்சியிலோ ஒருவருக்கு பிரச்சனை என்றாகிவிட்டால் அவரை கீழே தள்ளி பதவியைப் பறிப்பதிலேயே குறியாக இருக்கின்றனர். பாரதிய ஜனதா கட்சியில் கொஞ்சம் தண்டனை கொடுத்துட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்க்கிறாங்க.. ஆனால் சோனியாகாந்தி கிட்ட அது கிடையாது என்றார் அவர்.
ஏற்கெனவே எதியூரப்பாவுக்கு ஆதரவாக அமைச்சர்கள் ராஜினாமா செய்துவிட்ட நிலையில், தாம் பாஜகவிலிருந்து விலக நேரிடும் என்று எதியூரப்பாவும் கூறிவரும் சூழலில் சோனியாவை பாராட்டியிருப்பது கர்நாடக அரசியலில் ஒரு அதிரடித் திருப்பம் ஏற்படக் கூடும் என்றே தெரிகிறது.
எதியூரப்பா பிரச்சனை தொடங்கியது முதலே அவர் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாவார் என்று கூறப்பட்டாலும் அவர் அதை நிராகரித்துவந்தார். இந்த நிலையில்தான் எதியூரப்பாவின் சமூகமான லிங்காயத்துகளின் உயரிய மடமான சித்தகங்கா மடத்தின் குருவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் சோனியா கலந்து கொண்டிருந்தார்.
தற்போது எதியூரப்பா சோனியாவை புகழ்ந்திருப்பது பாஜகவை வெறுப்பேற்றவா? அல்லது ஐக்கியமாவதற்கா? என்பதுதான் கர்நாடக அரசியல் விவாதிக்கப்படுகிற விஷயமாக உள்ளது.


Click it and Unblock the Notifications
