நில ஒதுக்கீட்டில் மோசடி: வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்காக தாக்கப்பட்ட கர்நாடக அதிகாரி பலி
பெங்களூர்: நில ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கர்நாடக அதிகாரி எஸ்.பி. மகந்தேஷ் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருநதார். அவர் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
கர்நாடக கூட்டுறவுத் துறையில் உள்ள தணிக்கை அணியின் துணை இயக்குனராக இருந்தவர் எஸ்.பி.மகந்தேஷ்(48). அவர் கடந்த 15ம் தேதி மயங்கிய நிலையில் பெங்களூரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு முன்பு கிடந்தார். அவர் குடிபோதையில் கிடக்கிறார் என்று நினைத்து ஹோட்டல் நிர்வாகத்தினர் அவரைக் கவனிக்கவில்லை. பிறகு அந்த வழியாகச் சென்றவர்கள் அவரது உடலில் இருந்து ரத்தம் வருவதைப் பார்த்து அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் நீண்ட நேரமாக தெருவில் கிடந்ததால் அதிக அளவில் ரத்தம் வெளியாகியிருந்தது.
கடந்த 2 நாட்களாக அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அவரின் உடல் நிலை மோசமானது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் அரசு நிலம் ஒதுக்கப்பட்டதில் நடந்த முறைகேட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். கடந்த 15ம் தேதி அவர் தனது காரில் வீட்டுக்கு சென்றபோது யாரோ அவரை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர்.
அவரைத் தாக்கியவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை யாரும் சிக்கவில்லை. கடந்த 6ம் தேதி உத்தர கன்னடா மாவட்டத்தில் தனியார் ரிசார்ட்டில் உள்ள முதலைகளுக்கு சுற்றுலா பயணிகள் உணவளித்ததை தடுத்த வனத்துறை அதிகாரி மதன் நாயக் சுற்றுலா பயணிகளால் அடித்துக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications