இடைத்தேர்தல்: புதுக்கோட்டை வந்த 5 கம்பெனி எல்லை பாதுகாப்பு படை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை இடைத்தேர்தலை முன்னிட்டு அங்கு 5 கம்பெனி எல்லை பாதுகாப்பு படையினர் வந்துள்ளனர்.
புதுக்கோட்டை இடைத்தேர்தல் வரும் ஜூன் மாதம் 12ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானுக்கும், தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேனுக்கும் இடையே இருமுனைப் போட்டி நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இடைத்தேர்தலையொட்டி புதுக்கோட்டையில் 224 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் நியமித்துள்ள போலீஸ் தேர்தல் பார்வையாளர் ஹேமச்சந்திரன் புதுக்கோட்டைக்கு வந்தார். அவர் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்.
இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் 10 கம்பெனி மத்திய போலீஸ் படை ஈடுபடுத்தப்பட உள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக 5 கம்பெனி எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று இரவு புதுக்கோட்டை வந்தனர்.
துணை எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகள் 7 பேர், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் 14 பேர், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் 22 பேர், கான்ஸ்டபிள் (நாயக்) 384 பேர், மற்றவர்கள் 25 பேர் என மொத்தம் 452 பேர் வந்துள்ளனர். அவர்கள் புதுக்கோட்டை காவலர் சமுதாயக் கூடத்திற்கு வந்து அணி வகுத்தனர். பின்னர் 1 கம்பெனி படை அங்கு தங்க வைக்கப்பட்டது.
இது தவிர காவலர் பயிற்சி பள்ளியில் 1 கம்பெனியினரும், இச்சாடியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் 2 கம்பெனியினரும், அரிமளம் சாலையில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளி ஒன்றில் 1 கம்பெனியினரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பணியிடங்கள் இன்று ஒதுக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications