பெண்ணையாற்றில் தடுப்பணைகள் கட்டும் கர்நாடகம்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

மன்மோகன்சிங்குக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
கர்நாடகா மாநிலத்தில் தோன்றி, தமிழகம் வழியாக பாயும் பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சியை, தங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.
கர்நாடகாவில் உருவாகும் பெண்ணையார் ஆறு, தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் பாய்கிறது. இந்த மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாகவும் இந்த ஆறு இருந்து வருகிறது. மேலும் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது.
கர்நாடக தடுப்பணை
பெண்ணையார் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டவும், தண்ணீரை மாற்று வழியில் திருப்பி விடுவதற்கான கட்டுமானங்களை ஏற்படுத்தவும், கர்நாடக அரசு முயற்சி எடுத்து வருவதை நான் அறிகிறேன். இந்த முயற்சி தமிழகத்துக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். தவிர, இந்த முயற்சி, இரு மாநிலங்களுக்கு இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் செயலாகும்.
1892 ஒப்பந்தம்
கர்நாடகம் கட்ட உள்ள தடுப்பணைகளால் தமிழக விவசாயிகள் மட்டுமின்றி, அடிப்படை குடிநீர் வினியோக நிலைமையும் பாதிக்கப்படும். தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல், பெண்ணையார் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளோ, புதிய அணை கட்டோ அல்லது வேறு கட்டுமானங்களோ மேற்கொள்ளக்கூடாது என்று, 1892-ல் போடப்பட்ட சென்னை-மைசூர் ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், தடுப்பணைகள் கட்டுவதற்கு தமிழக அரசிடம் இருந்து சம்மதத்தை, கர்நாடக அரசு பெறவில்லை என்பதுடன், இதுபற்றிய தகவலைகூட அது தெரிவிக்கவில்லை. இந்த விஷயம் தெரிய வந்த உடன், தமிழக அரசின் சம்மதம், இல்லாமல் பெண்ணையாற்றில் எந்த கட்டுமானத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்று அம்மாநில அரசை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
எனவே, இந்த விஷயத்தில் தாங்கள் தலையிட்டு, பெண்ணையார் ஆற்றில் தடுப்பணைகள் மற்றும் பிற கட்டுமானங்கள் கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications