கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உச்சகட்ட கோஷ்டிப் பூசல்
திருவனந்தபுரம்: கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் கோஷ்டிப் பூசல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் இப்போது குறிவைத்திருப்பது பினராயி விஜயன் கோஷ்டியைச் சேர்ந்த ஹம்சாவை.
கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலர் பினராயி விஜயனுக்கும் முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கும் மோதல் நடந்து வருகிறது. இதில் இருவரின் ஆதரவாளர்களும் ஒருவரையொருவர் தாக்கி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பினராயி கோஷ்டியைச் சேர்ந்த டி.கே.ஹம்சா, கோஷ்டிப் பூசல் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், எப்போது கட்சியில் பிரச்னை வந்தாலும் வி.எஸ்.அச்சுதானந்தன் கட்சிக்குத் தோள் கொடுக்காமல் நழுவி விடுவார் என்று சாடியிருந்தார்.
இதற்குப் பதிலளித்து அச்சுதானந்தன் கூறியுள்ளதாவது:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி டி.கே.ஹம்சாவுக்கு ஒன்றும் தெரியாது. அவர் காங்கிரஸிலிருந்து இந்தக் கட்சிக்கு ஓடி வந்தவர். ஏ.கே.கோபாலன், முஸ்ஃபர் அகமது, ஜோதிபாசு ஆகியோரால்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது,ஆனால் ஹம்சா அப்போது காங்கிரஸ் கட்சியில்தான் இருந்தார்.
அவர் எம்.எல்.ஏ. ஆனது, அமைச்சரானது, எம்.பி. ஆனது எல்லாம் இங்கு வந்த பிறகுதான். அவர் கூறியிருப்பது சுத்த மடத்தனம். அவர் கருத்துக்கு பதில் கூறுவது அர்த்தமற்றது என்றார் அவர்.
கேரளத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு, புரட்சி மார்க்சிஸ்ட் கட்சி என்று தனிக் கட்சி தொடங்கிய டி.பி.சந்திரசேகரன் என்பவர் அண்மையில் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை சம்பந்தமாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து, பினராயி விஜயனுக்கும் அச்சுதானந்தனுக்கும் இடையே நடந்து வரும் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications