பெட்ரோல், டீசலை பதுக்கி வைக்கும் பங்குகள்?- தட்டுப்பாட்டால் மக்கள் கடும் அவதி
சென்னை: சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் பெட்ரோல், டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக டீசல் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. வேண்டும் என்றே இந்த செயற்கைத் தட்டுப்பாட்டை பெட்ரோலிய நிறுவனங்களும், பெட்ரோல் பங்குகளும் ஏற்படுத்தி வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
ஆனால் இந்தத் தட்டுப்பாட்டுக்கு நாங்கள் காரணம் இல்லை என்று கூறும் பெட்ரோல் பங்குகள், எண்ணை நிறுவனங்கள்தான் போதிய அளவில் டீசலை அனுப்பாமல் உள்ளனதாக அவர்கள் கூறுகிறார்கள்.
பெட்ரோல் விலை சமீபத்தில் மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு, லிட்டருக்கு ரூ. 7.50 என்று பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. இதனால் மக்கள் விழி பிதுங்கிப் போயுள்ளனர். மாத பட்ஜெட்டில் பெரும் தொகையை இனி மக்கள் கூடுதலாக செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டீசல் விலையும் உயரலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் வேண்டும் என்றே பங்குகளில் டீசல் இல்லை என்று கூறுவதாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். டீசலைத் தேடி பங்கு பங்காக அலையும் நிலைக்கு வாகன ஓட்டுநர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த 3 நாட்களுக்கும் மேலாக டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு காணப்படுகிறது. சென்னையில் உள்ள பெரும்பாலான பங்குகளில் டீசல் இல்லே என்று கூறுகிறார்கள். இதனால் கார், வேன், லாரிகளின் டிரைவர்கள் குறிப்பாக வாடகைக்கு வாகனம் ஓட்டுவோர் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
அதேபோல சென்னையில் பல இடங்களில் தற்போது பெட்ரோலுக்கும் திடீரென பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டுக்கான சரியான காரணம் தெரியவில்லை.
பங்குகளில் கேட்டால், எங்களுக்கு சப்ளை குறைவாக உள்ளதாக கூறுகிறார்கள். மக்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், வேண்டும் என்றே பங்குகளில் செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்குகிறார்கள் என்று குமுறுகிறார்கள்.
விலையையும் உயர்த்தியதோடு, இப்போது பற்றாக்குறையும் ஏற்பட்டிருப்பதால் எப்படி வண்டி ஓட்டுவது என்று புரியாமல் வாகனதாரர்கள் பெரும் குழப்பத்திலும், கோபத்திலும் மூழ்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications