மதுரை கலெக்டராக பொறுப்பேற்ற அன்சுல் மிஸ்ரா: விடை பெற்ற சகாயம்
மதுரை: மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த சகாயம் மாற்றப்பட்டதையடுத்து புதிய கலெக்டராக அன்சுல் மிஸ்ரா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்தபோது தேர்தல் ஆணையம் சகாயத்தை மதுரை மாவட்ட கலெக்டராக நியமித்தது. நேர்மையான செயல்பாடுகளுக்குப் பெயர் போனவர் சகாயம் என்பதால் அவரது செயல்பாடுகள் கூர்ந்து கவனிக்கப்பட்டன.
சட்டசபைத் தேர்தல் முடிந்த பிறகும் கூட சகாயம் தொடர்ந்து மதுரை கலெக்டராக செயல்பட்டு வந்தார். அவரது செயல்பாடுகள் மக்களால் பாராட்டப்பட்டு வந்தன. தமிழகத்தில் பல்வேறு மாவட்ட கலெக்டர்கள் பலமுறை மாற்றப்பட்டு வந்த போதிலும் சகாயம் மட்டும் மாற்றப்படாமல் தொடர்ந்து நீடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது சகாயம் திடீரென மாற்றப்பட்டுவிட்டார்.
அவரை உப்புச் சப்பில்லாத கோ ஆப்டெக்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநராக அரசு மாற்றியுள்ளது. அவருக்கு பதிலாக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா மதுரை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் இன்று மதுரை மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னாள் கலெக்டர் சகாயம் அன்சுல் மிஸ்ராவிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
மதுரை மாவட்டத்தை தமிழகத்தின் மாதிரி மாவட்டமாக மாற்றும் வகையில் பணியாற்றப் போவதாக புதிய கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications