கன்னியாகுமரியில் காதலன் வீட்டை தேடிச் சென்று தற்கொலை செய்த சென்னை பெண்!
கன்னியாகுமரி: காதலன் திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டு சொந்த ஊரான கன்னியாகுமரிக்குச் சென்று விட்டதால் சென்னை பெண் அவரை தேடி வந்து அவரது கண் முன்னே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள ஆளுவிளையைச் சேர்ந்த செந்தில் வினோ (27). பி.இ. முடித்துவிட்டு கடந்த ஓராண்டாக சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிறுவனத்தின் அருகே உள்ள நிறுவனத்தில் சென்னையைச் சேர்ந்த லாவண்யா (24) பணியாற்றி வந்தார். இருவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் காதல் ஏற்பட்டது.
இந் நிலையில் 2 மாதங்களுக்கு முன் செந்தில் வினோ சொந்த ஊருக்கு வந்து விட்டார். இருந்தாலும் இருவரும் தொலைபேசியில் பேசி வந்தனர். ஒரு மாதத்துக்கு முன் லாவண்யா அவரை தொடர்பு கொள்ள முயன்றபோது செந்தில் வினோவின் செல்போன் "சுவிட்ச் ஆப்'' செய்யப்பட்டதாக பதில் வந்தது. 4 வாரங்களாக செந்தில் வினோவும் போனில் தொடர்பு கொள்ளவில்லை.
இதையடுத்து லாவண்யா, காதலனை தேடி சென்னையில் இருந்து நேற்று காலை ஆளுவிளைக்கு வந்து செந்திலின் வீட்டை கண்டுபிடித்தார். செந்தில் மீது சந்தேகம் இருந்ததால் வரும்போதே விஷமும் வாங்கி வந்துள்ளார்.
லாவண்யாவை பார்த்த செந்தில் அவரிடம் பேச மறுத்தார். தன்னை திருமணம் செய்யுமாறு லாவண்யா கோரவே அதையும் ஏற்க மறுத்தார்.
இதனால் மனவேதனை அடைந்த லாவண்யா விஷத்தை குடித்தார். அவரை செந்தில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியிலேயே லாவண்யா இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த குளச்சல் போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக செந்தில் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications