டெல்லியில் அன்னா ஹசாரே- ராம்தேவ் இணைந்து நாளை உண்ணாவிரதம்

கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருதல், ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றுக்காக அன்னா ஹசாரேயும் ராம்தேவும் கடந்த ஓராண்டாக பல்வேறு போராட்டங்களை தனித் தனியே நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் ஒன்றாக டெல்லியில் நாளை ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் நாளைய உண்ணாவிரதப் போராட்டத்தின் போது 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகத்தையும் பாபாராம்தேவ் வெளியிடக் கூடும் எனத் தெரிகிறது.
நாளைய போராட்டத்துக்கு ராம்தேவின் பாரத் ஸ்வபிமான் அந்தோலன் அமைப்பு ஏற்பாடு செய்து வருகிறது. இதில் ஹசாரேயின் ஆதரவாளர்களான கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
ராணுவத்தில் தலைமை தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள வி.கே.சிங்கும் நாளை உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பாரா? என்றஎதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ராணுவத்தின் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்ததால் ஓய்வுக்குப் பிறகு தங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு ஹசாரே குழு சிங்குக்கு ஏற்கெனவே அழைப்பு விடுத்திருந்தது.
ஹசாரே- ராம்தேவ் கூட்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications