எனக்கு எதிராக சொல்றதெல்லாம் சுத்தப் பொய்: காங். செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங்

டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது:
நாட்டுக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டிய கறுப்பு பணம் என்று தினந்தோறும் ஒரு நம்ப முடியாத தொகையைக் கூறி வருகின்றனர். இந்த விவகாரத்தில்பல்வேறு, நம்பத்தகாத நபர்களால் பொய்யான, தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதை கட்சி தலைவர்கள், தொண்டர்கள் சேர்ந்து வலுவான வகையில் எதிர்த்து போராட வேண்டும். அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள் மோசடி செய்ததாக கூறப்படுகிற தொகைகள் நம்ப முடியாத அளவுக்கு உள்ளது. உண்மைக்கு அப்பால் எதுவுமே இருக்கக்கூடாது.
காங்கிரஸ் கட்சியால்தான் நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்து செல்ல முடியும். இதனால் வளர்ச்சியின் பலனை ஒவ்வொரு குடிமகனும் அனுபவிக்க முடியும். சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் காங்கிரஸ் கட்சி மட்டுமே அரவணைத்து செல்ல இயலும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவி ஏற்பதற்கு முன்பு இருந்ததை விட தற்போது வறுமை வேகமாக குறைந்து வருகிறது. பொருளாதார பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சாமானிய மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எல்லா முயற்சிகளையும் அரசு செய்கிறது.
உள்நாட்டு பாதுகாப்பு, ராணுவம், தொலை தொடர்பு, கல்வி, சமூக நலம், சுகாதாரத்துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றிருக்கிறோம். அதே நேரத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாவட்டங்கள் பிரச்சினைக்குரிய பகுதிகளாகவே நீடிக்கின்றன. உலகளவில் பொருளாதார மந்த நிலைக்கு மத்தியிலும், இந்தியா 2011-12 ஆண்டில் 7 சதவீத வளர்ச்சி கண்டிருக்கிறது. இது உலகின் அதிகபட்ச வளர்ச்சிவீதத்தில் ஒன்று.
உலக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலைமை உள்ளது. மேற்கு ஆசியாவில் நிச்சயமற்ற தன்மையால் கச்சா எண்ணெய் விலை போலவே பிற விலைகளும் உயர்ந்து வருகின்றன. இதெல்லாம் அரசுக்கு சவாலாக அமைந்துள்ளன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications