சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க சுப்ரீம் கோர்ட் எதிர்ப்பு
டெல்லி: கல்வி நிறுவனங்களில் சிறுபான்மையினருக்கு 4.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதை ரத்து செய்த ஆந்திர உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கல்வி நிறுவனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்குள் சிறுபான்மையினருக்கு 4.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று 5 மாநில தேர்தலை மனதில் வைத்து காங்கிரஸ் அறிவித்தது. இதையடுத்து காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இந்த உள்ஒதுக்கீட்டை அமல்படுத்தும் வேலையிலும் காங்கிரஸ் இறங்கியது. இந்நிலையில் இந்த உள்ஒதுக்கீட்டை எதிர்த்து ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் உள்ஒதுக்கீட்டை ரத்து செய்து கடந்த 28ம் தேதி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஜெ.எஸ். கேஹர் ஆந்திர உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்தனர். மேலும் எந்த அடிப்படையில் உள்ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்களை சமர்பிக்குமாறு அவர்கள் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். அதன்படி மத்திய அரசும் நேற்று ஆதாரங்களை சமர்பித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறுபான்மையினருக்கு 4.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதை ரத்து செய்த ஆந்திர உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் மிகவும் முக்கியமான விஷயத்தில் மத்திய அரசு அஜாக்கிரதையாக நடந்துள்ளது என்றும், ஆந்திர உயர் நீதமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்றும், இது குறித்து மத்திய அரசு அளித்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications