For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தி திணிப்பு: நேருவின் உறுதிமொழியை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும்- கருணாநிதி

By Chakra
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: இந்தியை திணிக்கும் விஷயத்தில் நேரு கொடுத்த உறுதி மொழியை காப்பாற்றிடும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில்,

கேள்வி: சேலம் அங்கம்மாள் காலனியில் குடிசைகள் தீ வைக்கப்பட்ட நிகழ்ச்சியை தொடர்ந்து சேலம் பள்ளப்பட்டி போலீசார் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்களே?

பதில்: அந்த சம்பவத்தில் பள்ளப்பட்டி போலீசார் உரிய நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அதைத்தொடர்ந்துதான் பள்ளப்பட்டி காவல் துறை இன்ஸ்பெக்டர் மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என்றும் செய்திகள் வந்துள்ளன.

இதையெல்லாம் பார்க்கும் போது அங்கம்மாள் காலனியில் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்திற்காக வீரபாண்டி ஆறுமுகம் உட்பட 19 பேர் மீது காவல் துறையினர் எடுத்த நடவடிக்கை எந்த அளவிற்கு சரியாக இருக்கும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா?. பள்ளப்பட்டி காவல் நிலையத்திலே உள்ளவர்கள் சரிவர பணியாற்றவில்லை என்று அரசாங்கமே நடவடிக்கை எடுக்கும் நிலையில், அந்தக் காவல் நிலைய காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மட்டும் எவ்வாறு சரியாக இருக்க முடியும்?

தா.பாண்டியனும் தொண்டர்களும்..

கேள்வி: அ.தி.மு.கவை கண்ணை மூடிக்கொண்டு தற்போதுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை ஆதரிப்பதற்கு, அந்த கட்சியிலே உள்ள தொண்டர்களே எதிர்ப்பு என்கிறார்களே?

பதில்: இன்று வெளிவந்துள்ள செய்தியின்படி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தருமபுரி மாவட்ட குழு கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு கூட்டம் மயிலாடுதுறையில் 10ம் தேதி நடைபெற்றதாகவும், அந்த கூட்டத்தில் அந்தக்கட்சி புதுக்கோட்டை தேர்தலில் போட்டியிடாதது குறித்து முக்கிய விவாதம் நடைபெற்றதாகவும், மாநிலக் குழு உறுப்பினர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்த மாநிலச் செயலாளர், அண்மையில் ஜெயலலிதாவை சந்தித்தது குறித்து விளக்கம் அளித்ததாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மாநில செயலாளரான தா.பாண்டியனின் செயல்பாடுகளில் விழுப்புரம், தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் அவருக்கு தொடர்ந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்ததாகவும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், விழுப்புரம் மாவட்ட முன்னாள் செயலாளர் ஸ்டாலின்மணி தலைமையில் பெரும்பாலான மாவட்ட நிர்வாகிகள் சி.பி.எம். கட்சியிலே இணைந்து விட்டதாகவும், பெரிதாக செய்தி வந்துள்ளது. தன் கட்சியிலே இந்த அளவுக்கு எதிர்ப்பை வைத்துக் கொண்டுதான் நம்மைப் பார்த்து இலங்கை பிரச்சனையில் அக்கறை காட்டவில்லை என்று முதல்வரை குளிர்விப்பதற்காக குற்றஞ்சாட்டுகிறார் தா.பாண்டியன்.

ஜெயலலிதா டெல்லி செல்ல வேண்டியது தானே:

கேள்வி: மண்ணெண்ணெய் அளவை மேலும் உயர்த்தும்படி கேட்டு பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருக்கிறாரே?

பதில்: தி.மு.க அரசு ஆட்சியிலே இருந்தபோது மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து நான் கடிதம் எழுதினால், மறுநாளே ஜெயலலிதா ஓர் அறிக்கை விடுவார். கடிதம் எழுதினால் போதுமா, முதல்வரே நேரில் சென்று கேட்க வேண்டாமா, என்ன செய்து கொண்டிருக்கிறார், என்றெல்லாம் கேள்விக் கணைகளை தொடுப்பார். மண்ணெண்ணெய்யை பொறுத்தவரையில் அப்போதும் மத்திய அரசு அளவை குறைத்து கொடுக்கத்தான் பார்ப்பார்கள்.

தி.மு.க. அரசின் ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு மாதமும் அப்போது உணவு அமைச்சராக இருந்த எ.வ.வேலுவை டெல்லிக்கு அனுப்பி, அந்தத்துறையின் அமைச்சரையும், செயலாளரையும் நேரில் சந்திக்க வைத்து, கூடுதலாக மண்எண்ணெய் பெற்று அதனை மக்களுக்கு விநியோகம் செய்துவந்தோம். இப்போது அந்தத்துறைக்கு என்று அமைச்சர் இருக்கிறாரா?. ஜெயலலிதா தனது கடிதத்தின் நகல் ஒன்றை அந்தத்துறையின் அமைச்சரிடம் கொடுத்து டெல்லி சென்று முயற்சித்துப்பார்த்தால் நிச்சயம் கூடுதலாக மண்எண்ணெய் கிடைக்கும்.

இந்தி திணிப்பு:

கேள்வி: மத்திய அரசு இந்தியை திணிக்கும் முயற்சியில் மீண்டும் ஈடுபடுகிறதா?

பதில்: அரசு அத்தகைய முயற்சிகளில் ஈடுபடா விட்டாலும், ஆங்காங்குள்ள சில அதிகாரிகளும், இந்தி வெறியர்களாலும் இந்தியை திணிக்கும் முயற்சியில் மறைமுகமாக தங்களால் இயன்ற அளவிற்கு ஈடுபட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். அத்தகைய முயற்சிகளில் ஒன்று தான் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கிண்டல் செய்து வெளியிடப்பட்ட கேலிச்சித்திரம்.

அதுபோலவே தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரிந்து வரும் அலுவலர்களின் பதவி உயர்வுக்கு, கருத்தில் கொள்ளப்படும் அம்சங்களில் ஒன்றாக, அவர்கள் ஆட்சி மொழியான இந்தி மொழியின் செயல்பாட்டிற்கு ஆற்றிய பணிகளை குறிப்பிட வேண்டுமென்று கேட்டிருப்பதாக எனக்கு தகவல் சொல்லப்பட்டது. இந்தி மொழி பேசாத மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான அலுவலர்களை பாதித்திடும் இதுபோன்ற செயல்களையெல்லாம் மத்திய அரசு உடனடியாக கவனித்து, நேரு கொடுத்த உறுதிமொழியை காப்பாற்றிடும் வகையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

English summary
Days after demanding the removal of a controversial cartoon on anti-Hindi stir, DMK chief M Karunanidhi today charged some officials and 'fanatics' with trying to impose Hindi on non-Hindi speaking states and asked the Centre to keep the promise give by late Prime Minister Jawaharlal Nehru on the language issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X