விசாகப்பட்டினம் உருக்கு ஆலையில் ஆக்சிஜன் பிளாண்ட் வெடித்து 16 பேர் பலி, 15 பேர் படுகாயம்
விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான ஆர்.ஐ.என்.எல். உருக்கு ஆலையில் உள்ள ஆக்சிஜன் பிளாண்ட் வெடித்ததில் ஜெனரல் மேனேஜர் கல்சி நாயக் உள்பட 16 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ராஷ்ட்ரிய இஸ்பட் நிகாம் லிமிடெட்(ஆர்.ஐ.என்.எல்) உருக்கு ஆலையில் நேற்று இரவு 8.45 மணிக்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் பிளாண்டில் சோதனை நடத்திக் கொண்டிருக்கையில் அது திடீர் என்று வெடித்தது. இதில் ஆலையின் ஜெனரல் மேனேஜர் கல்சி நாயக் உள்பட 16 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த விபத்து ஏற்பட்டபோது ஆக்சிஜன் பிளாண்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் சுமார் 500 மீட்டர் தூரம் வரை தூக்கி வீசப்பட்டன.
இந்த விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு 80 முதல் 95 சதவீதம் வரை தீக்காயங்கள் உள்ளன. அதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. காயம் அடைந்தவர்கள் உருக்கு ஆலையின் பொது மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்சிஜன் பிளாண்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தான் இந்த விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த உருக்கு ஆலை கடந்த 1971ம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆலையின் 40 ஆண்டு கால வரலாற்றில் இது தான் மோசமான விபத்து ஆகும். கடந்த 2 மாதத்திற்குள் நடந்துள்ள 3வது தீ விபத்து இது. மேலும் இது இந்த ஆண்டில் நடந்துள்ள 4வது விபத்தாகும். கடந்த மே மாதம் 1ம் தேதி ஏற்பட்ட விபத்தில் 2 ஊழியர்கள் உடல் கருகி பலியாகினர். மே 22ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 கோடி அளவு சேதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications