என் உயிர் பிரிவதற்குள் தமிழீழத்தைக் காண விரும்புகிறேன்-கருணாநிதி

திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதியின் 89-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கருணாநிதி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கொள்கைகளை மாற்றிக் கொள்ளமாட்டோம். திமுக நிர்வாகிகளை நீதிமன்றம் விடுவித்தாலும் கூட அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்கிறது.
திருவாரூர் தொகுதியில் திமுக ஆட்சியில் பல நலத்திட்டங்கள் தொடங்கப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அத்திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தமிழ் ஈழம் அமைவதுதான் எனது வாழ்வின் லட்சியம். நான் உயிர் விடுவதற்குள் தமிழ் ஈழம் அமைவதைக் காண விரும்புகிறேன். அப்படி தமிழ் ஈழம் அமைந்து, அதற்கு அடுத்த கணமே நான் இறந்தாலும் மகிழ்ச்சிதான். நான் உயிரிழந்தால்தான் தமிழீழம் அமையும் என்றால், அதற்காக உயிரை விடவும் நான் தயார்.
இலங்கையில் தமிழீழம் மலர வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு அரசியல் உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும். இதற்காக மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வலியுறுத்துவோம். ஈழம் மலர, உலகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லவே டெசோ அமைப்பு சார்பில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி விழுப்புரத்தில் மாநாடு நடத்தவுள்ளோம்.
டெசோ மாநாட்டில் தமிழீழத்தை எப்படி அமைதியான வழியில், ஜனநாயக முறையில், சட்டப்பூர்வமாக அடைய வேண்டும் என்பது குறித்து விவாதித்து, அதற்கான போராட்ட முறைகள் தீர்மானிக்கப்படும்.
தமிழீழம் என்பது எனது நீண்ட நாள் கனவு மட்டுமல்ல, தமிழர் தந்தை செல்வா, படுகொலையான பல ஆயிரம் தமிழர்களின் கனவும் கூட.
கிழக்கு தைமூரைப் போல, மான்டிநீக்ரோவைப் போல, தமிழீழமும் உருவாக்கப்பட வேண்டும். ஐ.நா. சபை தமிழீழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அங்கு வசிக்கும் தமிழர்கள் மட்டுமல்லாமல் புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்களையும் அந்த வாக்கெடுப்பில் பங்கேற்கச் செய்ய வேண்டும்.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஏதோ இன்றைக்கு நேற்றைக்கு நடத்தியது அல்ல. தமிழ் மொழியைக் காக்க, மொழியின் தன்மானத்தை காக்க அன்று முதல் இன்று வரை போராடப்படுகிறது.
தமிழகம் முழுவதும் தோல்வியுற்றாலும், திருவாரூரில் மண்ணில் பிறந்ததுக்காக என்னை வெற்றிப்பெறச் செய்துள்ளீர்கள். திருவாரூர் வளர்ச்சிக்காக புதை சாக்கடைத் திட்டம், மத்தியப் பல்கலைக்கழகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கொண்டு வரப்பட்டது. இதுதவிர பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த ஓராண்டுக்கு ரூ. 2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications