இரட்டைப் பெண் குழந்தைகளை விற்ற தாய் உள்பட 6 பேர் கைது
நெல்லை: நெல்லையில் புரோக்கர்கள் மூலம் இரட்டைப் பெண் குழந்தைகளை விற்ற தாய் மற்றும் 5 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் நடுவங்குறிச்சியைச் சேர்ந்த சுடலை மனைவி செல்வி. அண்மையில் அவரது கணவர் பிரிந்து சென்றதால் செல்வி தற்போது சுத்தமல்லி வ.உ.சி. நகரில் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே 8 வயதில் பெண் குழந்தை இருந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. இதனால் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என வருந்திய செல்வி அவைகளை விற்பது குறித்து அருகில் வசித்து வந்த பாத்திமாவிடம் ஆலோசனை கேட்டார்.
பாத்திமா மேலப்பாளையத்தைச் சேர்ந்த அவரது உறவினர் சுலேகா மூலம் அதே பகுதியைச் சேர்ந்த வேல்சாமியிடம் பேசி ஒரு குழந்தையை விற்க ஏற்பாடு செய்தார். மற்றொரு குழந்தையை சாம்பவர் வடகரையைச் சேர்ந்த பொன்னுதாய், தென்காசி ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் மூலம் செல்வி விற்றார். இரு குழந்தைகளை புரோக்கர் மூலம் பெற்ற தாயே விற்ற சம்பவம் நெல்லை சரணலாய தொண்டு நிறுவன அமைப்பாளர் ஜெயராஜுக்கு தெரிய வந்தது. உடனே அவர் இது குறித்து சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி குழந்தைகளின் தாய் செல்வி, புரோக்கர்கள் உள்பட 6 பேரையும் நேற்று மாலை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குழந்தைகள் மீட்கப்பட்டன. பின்னர் குழந்தைகள் ஆலங்குளம் விடியல் சரணாலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் பாளை சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications