சங்மாவுக்கு ஜெயலலிதா ஆதரவு கோரினார்: அத்வானி

அத்வானியின் வீட்டில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் கூடி ஆலோசனை நடத்தின.
இக்கூட்டத்திற்குப் பின்னர் அத்வானி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இன்றைய கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. தற்போதைய சூழ்நிலையை ஆராய்ந்து, என்ன மாதிரியான உத்திகளைக் கடைப்பிடிக்கலாம் என்பது குறித்து ஆராய மட்டுமே இன்றைய கூட்டம் நடந்தது. வேட்பாளர் தேர்வு குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவில்லை.
காங்கிரஸுடன் இல்லாத கட்சிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையை உன்னிப்பாக கவனிக்க முடிவு செய்துள்ளோம். ஒவ்வொரு நிகழ்வையும் கூர்ந்து கவனித்து வருகிறோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களின் கருத்தையும் கோரியுள்ளோம்.
குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான விஷயங்களை ஆளும் கூட்டணி மிகவும் மோசமான முறையில் அணுகி வருகிறது. இது வருத்தம் தருகிறது.
எப்படி 1969ம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தல் மிகப் பரபரப்பானதாக இருந்ததோ அதே போல தற்போதைய தேர்தலும் மிகவும் பரபரப்பானதாக மாறியுள்ளது என்றார் அத்வானி.
முன்னதாக நேற்று சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அத்வானி, குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளர்களாக கருதப்படும் அனைவர் குறித்தும் ஜெயலலிதாவுடன் ஆலோசித்தேன். சங்மா குறித்தும் ஜெயலலிதா என்னிடம் பேசினார் என்றார்.












Click it and Unblock the Notifications