புதுக்கோட்டையில் அதிமுகவுக்கு பெரிய வெற்றிதான்!

புதுக்கோட்டைத் தொகுதியை அதிமுகவின் கோட்டை என்று கூற முடியாது. காரணம், இது காங்கிரஸின் வசம்தான் அதிகம் இருந்துள்ளது. இங்கு இதுவரை நடந்த 13 தேர்தல்களில் 5 முறை காங்கிரஸே வென்றுள்ளது. திமுக 4 முறையும், அதிமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. சிபிஐ மற்றும் டிடிபி ஆகியவை தலா ஒருமுறை வென்றுள்ளன.
அதிமுகவின் விஜய பாஸ்கர் 2001 தேர்தலில் இங்கு வெற்றி பெற்றார். இவர்தான் அதிமுக சார்பில் இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் எம்.எல்.ஏ ஆவார். அடுத்து 2006 தேர்தலில் நெடுஞ்செழியன் இங்கு அதிமுக சார்பில் வெற்றி பெற்றார்.
2011 பொதுத் தேர்தலில் இத்தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிமுக விட்டுக் கொடுத்தது.
2006 தேர்தலில் அதிமுக வேட்பாளர் நெடுஞ்செழியன் வெறும் 1950 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றார். 2வது இடத்தைப் பிடித்தது திமுக.
அதேபோல 2011 தேர்தலில் அதிமுக ஆதரவுடன் களம் கண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துக்குமரன், 3101 வாக்குகள் வித்தியாசத்தில்தான் திமுக வேட்பாளரை தோற்கடித்தார்.
இந்த நிலையில், தற்போது நடந்த இடைத் தேர்தலில் அதிமுக இங்கு மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளது. அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிகவின் ஜாகிர் உசேனை 71,498 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
கடந்த 2001 தேர்தலில் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் தன்னை எதிர்த்து் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பெரியண்ணனை 28,183 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இந்த இடைத் தேர்தலில் அந்த அளவை அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் தாண்டி விட்டார்.
கடந்த 2 தேர்தல்களாக மிகக் குறைந்த வித்தியாசத்தில்தான் இங்கு அதிமுகவும், அதன் கூட்டணிக் கட்சியும் வென்றுள்ளன. ஆனால் தற்போதைய இடைத் தேர்தலில் அதை முறியடித்து பெரிய அளவிலான வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications