''நான் யாரு.. எனக்கே தெரியலையே''... ஜனாதிபதி தேர்தல் விஷயத்தில் பாஜகவின் நிலை!

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தேர்வை, 2014ம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுடன் முடிச்சு போட்டு பாஜக எடுத்த முடிவுகள் அந்தக் கட்சியை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.
முதலில் பிரணாப் முகர்ஜி அல்லது ஹமீத் அன்சாரி என்று காங்கிரஸ் தரப்பில் இரு வேட்பாளர் பெயர்கள் வெளியே கசியவிடப்பட்டன. உடனே, கூட்டணிக் கட்சிகளுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் அரசியல்வாதியான பிரணாபையோ, ஜனாதிபதி பதவிக்கு லாயக்கில்லாத அன்சாரியையோ தேசிய ஜனநாயகக் கூட்டணி ஏற்காது என்று அறிவித்தார் பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ்.
அவர் பேசி முடித்த அடுத்த ஒரு மணி நேரத்தில் பாஜக கூட்டணியின் முக்கியக் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும் பிகார் முதல்வருமான நிதிஷ் குமாரிடமிருந்து அதிரடி பதில் வந்தது.
ஏன் அரசியல்வாதியை ஜனாதிபதியாக ஏற்கக் கூடாது, ஏன் அன்சாரியை ஜனாதிபதியாக்கினால் என்ன தப்பு என்று கேள்வி எழுப்பி பாஜகவுக்கு முதல் அதிர்ச்சி வைத்தியம் தந்தார் நிதிஷ். மேலும் சுஷ்மாவின் பேச்சு பாஜகவின் கருத்து தானே தவிர, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கருத்து அல்ல என்றார்.
இதையடுத்து பாஜக தலைவர் நிதின் கட்காரி நிருபர்களை அழைத்து, ஆமாம் ஆமாம்.. அது சுஷ்மாவின் தனிப்பட்ட கருத்து தான் என்று விளக்கம் தந்தார்.
மேலும் பாஜக இந்த விஷயத்தில் எந்த முடிவையும் எடுக்காமல் காலம் தாழ்த்தவே, ஒடிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பி.ஏ.சங்மாவை நிறுத்துவோம் என்று சொல்ல, அதற்கு ஜெயலலிதாவும் ஆதரவு தெரிவிக்க களத்தில் குதித்தார் சங்மா.
இதன்மூலம் பாஜக கூட்டணியில் உள்ள கட்சியும், கூட்டணியில் இல்லாவிட்டாலும் பாஜகவை ஆதரிக்கும் அதிமுகவும் ஜனாதிபதி தேர்தல் விஷயத்தில் பாஜகை கைவிட்டுவிட்டன.
தனது ஜனாதிபதி வேட்பாளரை முதலிலேயே அறிவித்துவிட்டால், பாஜகவும் எதிர்க் கட்சிகளும் கூட்டு சேர்ந்து போட்டி வேட்பாளரை நிறுத்த நிறைய கால அவகாசம் கிடைத்துவிடும் என்பதால், பெயரையே வெளியில் சொல்லாமல் அமைதி காத்து தனது அரசியல் தீர்க்கதரிசனத்தை வெளிப்படுத்தினார் சோனியா காந்தி.
கடைசி நேரத்தில் பெயரைச் சொல்லி எதிர்க் கட்சிகள் சுதாரிப்பதற்குக் கூட அவசாகம் தரவில்லை சோனியா. பிரணாப் பெயரை அறிவித்து கிட்டத்தட்ட 4 நாட்கள் ஓடிவிட்ட நிலையில், இன்று வரை பாஜகவால் ஒரு வேட்பாளரை அறிவிக்க முடியவில்லை.
இதற்குக் காரணம், அந்தக் கட்சியின் முரண்டுபாடுகளே.
முதலில் பிரணாப்பை ஆதரித்து, அதற்குப் பதிலாக துணை ஜனாதிபதி பதவியை பெறலாமா என்று அந்தக் கட்சி யோசித்தது.
பின்னர் அதிமுக, பிஜூ ஜனதா தளம் ஆதரிக்கும் சங்மாவை ஆதரித்து, இதன்மூலம் இரு கட்சிகளையும் தாஜா செய்து கூட்டணிக்குக் கொண்டு வந்து 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கலாமா என்று யோசித்தது.
பின்னர் மம்தா பானர்ஜியையும் கூட்டணிக்குள் இழுக்க வசதியாக அவர் ஆதரிக்கும் அப்துல் கலாமை ஆதரித்து சங்மாவை கைவிட்டுவிடலாமா என்று யோசித்தது.
அப்படிச் செய்தாஸ் அதிமுகவும் பிஜூ ஜனதா தளமும் நம் கூட்டணிக்கு வர மாட்டார்களே என்று தவித்தது.
இதையடுத்து பிரணாப் முகர்ஜியையே ஏற்றுக் கொள்ளலாமா என்று யோசித்தது. ஆனால், இதைச் செய்தால் அதிமுக, பிஜூ ஜனதா தளம், மம்தா மூவருமே நமது கூட்டணிக்கு வர மாட்டார்களே என்று திணறியது.
அதே நேரத்தில் பிரணாப்பை ஆதரிக்காவிட்டால், அவரை ஆதரிக்கும் சிவசேனா, இழக்க வேண்டியிருக்குமோ?. அன்சாரியை ஏற்க மறுத்தால் ஐக்கிய ஜனதாதளத்தை இழக்க வேண்டி வருமே என்று பாஜக ஏகப்பட்ட குழப்பத்தில் உள்ளது.
இப்படியாக 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் அரசியல் செய்ய முயன்ற பாஜக இதுவரை 3 முறை இரவு, பகலாக தேசிய ஜனநாயகக் கூட்டத்தைக் கூட்டியும் (இந்தக் கூட்டங்களில் சுப்பிரமணிக்கு சாமியும் வந்து உட்கார்ந்தது தான் ஹைலைட்) எந்த முடிவையும் எடுக்க முடியாத இடியாப்ப சிக்கலில் மாட்டி முழித்துக் கொண்டுள்ளது.
இந் நிலையில் பாஜகவை மறைமுகமாகக் கட்டுப்படுத்தும் ஆர்எஸ்எஸ், தானும் களத்தில் குதித்து கலாமை ஜனாதிபதியாக்கலாம் என்று கூறி வருகிறது.
பாஜக என்ன செய்யப் போகிறது என்பது இதுவரை அந்தக் கட்சிக்கே தெரியாது என்பதே அப்பட்டமான உண்மை.












Click it and Unblock the Notifications