முலாயமை பாஜக ஏஜெண்ட் என்பதா? காங்கிரசின் ரஷீத் அல்வி மன்னிப்பு கேட்டாகனும்- சமாஜ்வாதி கட்சி
டெல்லி: முலாயம்சிங் யாதவை பாரதிய ஜனதா கட்சியின் ஏஜெண்ட் என்று கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் ரஷித் அல்வி மன்னிப்பு கேட்டாக வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி வலியுறுத்தியுள்ளது.
ரஷித் அல்வியின் கருத்தை காங்கிரஸ் கட்சி ஏற்கவில்லை என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன் திரிவேதி கூறிவிட்டார். ரஷித் அல்வியின் பேச்சு குறித்து கடும் கோபத்தில் இருக்கும் சமாஜ்வாதி கட்சி, சிலருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டால் நிச்சயம் மனநோய் மருத்துவமனைக்குத்தான் போக வேண்டும் என்று அல்வியை சாடியிருக்கிறது. மேலும் அல்வி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்கவும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் சகிஷ் சித்திக், இதெல்லாம் காங்கிரஸ் தலைமைக்குத் தெரிந்துதான் பேசுகிறார்கள் என்று கருதுகிறோம். இப்படிப் பேச அனுமதிக்கின்றவர்கள் எங்களோட ஆதரவை வேண்டாம்னு பகிரங்கமாக சொல்லிவிடனும். ஒவ்வொரு முக்கிய பிரச்சனைக்கும் முலாயம்ஜியோட ஆதரவு வேண்டு என்று எப்படி சோனியா எதிர்ப்பார்க்கிறார்? என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
பிரணாப் முகர்ஜியை குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவது குறித்து காங்கிரசுடன் முரண்பட்டு மமதாவுடன் கை கோர்த்திருந்தார் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங். பின்னர் ஒருவழியாக அவரை சமாதானப்படுத்தி மீண்டும் கூட்டணிக்கு கொண்டு வந்து சேர்த்திருந்தனர். இந்த நிலையில் சமாஜ்வாதித் தலைவர் முலாயம்சிங்கை மிகக் கடுமையான வார்த்தைகளில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவரே விமர்சித்திருப்பது என்பது கூட்டணியில் மீண்டும் குழப்பத்தை மட்டும் ஏற்படுத்தாது. குடியரசுத் தலைவர் தேர்தலிலும்கூட எதிரொல்லிக்கும். ஏனெனில் சங்மா இப்பொழுது எதிரணியின் வலுவான வேட்பாளராகிவிட்டதால் என்ன முடிவையும் சமாஜ்வாதி கட்சி எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications