திருப்பதியில் இந்தாண்டு இரண்டு பிரம்மோற்சவம் - தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா பத்து நாட்கள் நடைபெறும். இந்தாண்டு இரண்டு பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இரண்டு பிரம்மோற்சவ விழாக்களையும் சிறப்பாக நடத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக, திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சீனிவாசராஜு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
திருமலையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பிரம்மோற்சவம், செப்., 18 முதல் 26ம் தேதி வரையிலும், மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் நவராத்திரி பிரம்மோற்சவம், அக்., 15 முதல் 23ம் தேதி வரையும் நடைபெற உள்ளது. திருமலையில், தற்போது தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. பிரம்மோற்சவ விழாவுக்குள் இப்பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இதனிடையே திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு, பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலைமுடியை ஏலம் விட்டதில், தேவஸ்தான நிர்வாகத்திற்கு, 61 கோடியே 72 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்தது. இதுவரை சேகரிக்கப்பட்டிருந்த, 89 டன், 413 கிலோ தலைமுடியை தேவஸ்தான நிர்வாகம், நேற்று முன்தினம் இணையதளம் மூலம் ஏலம் விட்டது. இந்த தலைமுடி, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என, தரம் பிரிக்கப்பட்டது. இவற்றை ஏலம் விட்டதில் மொத்தம், 61 கோடியே 72 லட்ச ரூபாய் தலைமுடி ஏலத்தின் மூலம் வருமானம் கிடைத்துள்ளதாக, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications