கொழும்பு செல்கிறார் சிவசங்கர மேனன்- கண்டனம் தெரிவிப்பாரா, சமாதானம் பேசுவாரா?

தனது பயணத்தின்போது ராஜபக்சே மற்றும் அவரது தம்பி கோத்தபயா ராஜபக்சே ஆகியோரை மேனன் சந்திப்பார் என்று தெரிகிறது. இதற்கு முன்பு வெளியுறவுத்துறை செயலாளராக பலமுறை மேனன் கொழும்பு சென்று வந்துள்ளார். ஆனால் எந்த பயணத்திலும் அவர் இந்தியாவின் கோபத்தையோ, கண்டனத்தையோ தெரிவித்ததாக செய்தி இல்லை. எனவே மேனனின் தற்போதைய பயணம் எந்த வகையானதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் மாநாட்டில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்தது. தமிழக அரசியல் கட்சிகளின் கடும் நெருக்குதலுக்குப் பணிந்தே இவ்வாறு இந்தியா செய்ததாக அப்போதே கூறப்பட்டது. அதற்கேற்ப, கோபத்தில் உள்ள இலங்கையை சமாதானப்படுத்தும் வகையிலான பல நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.
ஆனால் தற்போது ராஜபக்சேவும், கோத்தபயாவும், ராஜபக்சே அமைச்சர்கள் சிலரும் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைக் கூறி வருகின்றனர். இந்தியாவை கேவலப்படுத்தும் வகையில் கருத்துக்களைத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக ராஜபக்சே அமைச்ரான சம்பிகா ரணவக்கே என்பவர் இன்னும் 100 முள்ளிவாய்க்கால்களை தமிழர்கள் சந்திக்க வேண்டுமா என்று இனவெறியுடன் பேசியுள்ளார்.
அதேபோல கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் வந்தால் இனி 20 வருடம் சிறைத் தண்டனை தருவோம் என்று ராஜபக்சே பகிரங்கமாகவே இந்தியாவுக்கு சவால் விடுத்துள்ளார். ராஜபக்சேவின் இந்தப் பேச்சுக்கு இதுவரை இந்தியா சார்பில் எந்தவிதமான கண்டனமோ, எதிர்ப்போ தெரிவிக்கப்படவில்லை. ஒரு கருத்து கூட வெளிப்படவில்லை.
இப்படி தொடர்ந்து இந்தியாவை எரிச்சலூட்டியும், சீனாவுடன் நெருக்கத்தை வலுப்படுத்தியும் வருகிறது இலங்கை. இதையடுத்து மேனன் அங்கு செல்கிறார். ஆனால் அவர் போய் கோபத்துடன் கண்டனத்தைத் தெரிவிப்பாரா அல்லது இலங்கையை சமாதானப்படுத்துவது போல பேசி விட்டு வருவாரா என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications