ஆண்டிப்பட்டி அருகே கோழிப் பண்ணையில் தீ: 10,000 கோழிகள் தீயில் கருகி பலி
தேனி: ஆண்டிப்பட்டியில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10,000 கோழிகள் தீயில் கருகி உயிர் இழந்தன.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்தவர் சவுந்திரராஜன். மேக்கிழார்பட்டியில் உள்ள அவரது தோட்டத்தில் 3 ஷெட் அமைத்து கோழிப் பண்ணை நடத்தி வந்தார். இந்த கோழிப் பண்ணையை மதுரையைச் சேர்ந்த ஆல்வின் என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். இந்த பண்ணையில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட கோழிகள் வளர்க்கப்பட்டன.
இந்நிலையில் கோழிப் பண்ணைக்கு அருகில் இருந்த தோட்டத்தில் குப்பைகளுக்கு தீ வைத்துள்ளனர். இந்த தீ கோழிப் பண்ணையின் ஷெட்களில் பிடித்து தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பலத்த காற்று வீசியதால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் பண்ணையில் இருந்த கோழிகள் வெளியே செல்ல முடியாமல் திணறின. இந்த விபத்தில் சுமார் 10,000 கோழிகள் தீயில் கருகி உயிர் இழந்தன.
இது குறித்து தகவல் அறிந்த ஆண்டிப்பட்டி தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கடும் போராட்டத்திற்கு பின்பு அணைத்தனர். இந்த விபத்து குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications