அறந்தாங்கி ஆசிரியையைக் கொன்றது ஊர்ப் பிரமுகர்கள் ஏவிய கூலிப்படையா?...திடீர் பரபரப்பு!

மேலும் கைதான சரவணன் கூறியுள்ள வாக்குமூலம் பொய்யானது என்றும், தனது மகளின் பெயரைக் கெடுக்கும் வகையில் இந்த வாக்குமூலத்தை போலீஸாரே திட்டமிட்டு வெளியிட்டுள்ளனர் என்றும் அவர் புகார் கூறியுள்ளார். இதனால் ஆசிரியை கொலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அறந்தாங்கியில் வசித்து வந்தவர் 46 வயதான வானதி. இவர் வம்பரம்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் படுகொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக மினி பஸ் டிரைவர் சரவணன் என்பவர் போலீஸில் சரணடைந்தார். அவர் தனது வாக்குமூலத்தில், ஆசிரியைக்கும், தனக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாகவும், அடிக்கடி தன்னை ஆசிரியை செக்ஸ் வைத்துக் கொள்ள வற்புறுத்தி வந்தார் என்றும், அதைத் தன்னால்தாங்க முடியவில்லை என்றும், விலகிப் போக நினைத்ததாகவும், அப்போது இருவரும் உறவு கொண்டதை செல்போனில் படம் எடுத்து வைத்திருப்பதாக ஆசிரியை மிரட்டியதாகவும், இதனால் அவரைக்கொலை செய்து விட்டதாகவும் கூறியிருந்தார் சரவணன்.
இந்த நிலையில், ஆசிரியை வானதியின் தந்தையான ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியன் இந்தப் புகார்களை ஒட்டுமொத்தமாக மறுத்துள்ளார். மேலும் சரவணன் உண்மையான குற்றவாளி அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது மகள் வானதி வேலை பார்க்கும் வம்பரம்பட்டிக்கு செல்ல வேண்டும் என்றால், அறந்தாங்கியில் இருந்து புதுப்பட்டிக்கு சென்று அங்கிருந்து காரைக்குடி சாலையில் உள்ள வம்பரம்பட்டிக்கு செல்ல வேண்டும். ஆனால் தற்போது கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள சரவணன் ஓட்டிய மினிபஸ் அரிமளத்திலிருந்து தள்ளாம்பட்டி வழியாக புதுப்பட்டிக்கு சென்றுவருகிறது. அப்படியிருக்க வம்பரம்பட்டிக்கு செல்ல வேண்டிய தலைமை ஆசிரியர் வானதி, மினிபஸ் டிரைவர் சரவணனை சந்திக்க வாய்ப்பில்லை.
மேலும் எனது மகள் வானதியின் மூன்றாவது குழந்தை நித்யஸ்ரீ, கைது செய்யப்பட்ட சரவணனை பார்த்ததே இல்லை என போலீசாரிடம் கூறியுள்ளது. இந்த கொலையை தனி ஒருவரால் செய்திருக்க முடியாது. வானதியின் செல்போன், அவர் அணிந்திருந்த 2 பவுன் செயின், வங்கி ஏடிஎம் கார்டு ஆகியவற்றை கொலை செய்த சரவணன் எடுத்து சென்று விட்டதாக கூறும் போலீசார், அவற்றை இன்னும் ஏன் அவரிடமிருந்து கைப்பற்றவில்லை.
மேலும் கைது செய்யப்பட்ட சரவணனை போட்டோ எடுக்க பத்திரிகை போட்டோகிராபர்களை அனுமதிக்காமல், ஸ்டுடியோவில் வைத்து அவரை போட்டோ எடுத்து கொடுத்துள்ளனர்.
புதுப்பட்டி, வம்பரம்பட்டி பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலர், தனியாக இருக்கும் வானதியின் மீது மோகம் கொண்டு அவரிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளனர். அதற்கு வானதி இடம் தராததால் கூலிப்படை மூலம் வானதியை கொலை செய்துள்ளனர். ஆனால் போலீசார் என்ன காரணத்தாலோ அவர்களை விட்டுவிட்டு, சரவணன் மீது கொலைப்பழியை போட்டுள்ளனர்.
அத்துடன் சரவணன் கூறியதாக போலீசாரே வாக்குமூலம் தயாரித்துள்ளனர். நான் மேற்கூறிய சந்தேகங்கள் குறித்து போலீசாரிடம் கேட்டதற்கு, வானதியை கொலை செய்ததாக சரவணனே வாக்குமூலம் அளித்துவிட்டார் என்று ஒரே வார்த்தையில் கூறி விட்டனர் என்று கூறியுள்ளார் பாலசுப்ரமணியன்.
வானதி கொலை தொடர்பாக அவரது தந்தை கூறியுள்ள இந்தப் புதிய புகார்களால் வழக்கில் பெரும் திருப்பமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. வானதி மீது மோகம் கொண்ட முக்கியப் புள்ளிகள் யார், அவர்கள்தான் கூலிப்படையை ஏவி விட்டனரா என்ற பெரும் கேள்விகளும் எழுந்துள்ளன.
காவல்துறைதான் பதில் சொல்ல வேண்டும்...!
படம்: தினகரன்












Click it and Unblock the Notifications