போலீஸ் ஐ.ஜி.பிரமேத் குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது!
சென்னை: திருப்பூப் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஐ.ஜி. பிரமேத் குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த பாசி நிதி நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடி செய்தது. இந்த விவகாரத்தில் முதலில் மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்பு இந்த வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது.
திருப்பூர் பாசி நிறுவன மோசடி வழக்கை விசாரித்த போது, மேற்கு மண்டல ஐ.ஜியாக இருந்த பிரமோத் குமார், பாசி நிர்வாக இயக்குனரிடம் பணம் பெற்றதாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் விசாரணை நடத்திய சிபிஐ போலீசார் வழக்குப் பதிவு செய்து போலீஸ் ஐ.ஜி.பிரமோத்குமாரை டெல்லியில் வைத்து கைது செய்தனர்.
இதனையடுத்து கோவையில் பிரமோத்குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் 5 நாள் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரமோத்குமார் ரூ.826 கோடி நிதி மோசடியில் ஈடுபட்டதாக தெரிய வந்தது. பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் தனக்கு ஜாமீன் கோரி போலீஸ் ஐ.ஜி. பிரமோத் குமார் தாக்கல் செய்த மனுவை கோவை சி.பி.ஐ நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீஸ் ஐ.ஜி பிரமோத் குமார் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
அதில், நான் நிரபராதி, எந்த தவறும் செய்யவில்லை. சி.பி.ஐ போலீசார் வேண்டும் என்றே என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் விசாரணை முடிந்துவிட்டது. எனவே என்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மதிவாணன், பிரமேத்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். தினமும் சி.பி.ஐ விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சக காவல்துறை அதிகாரிகளுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.












Click it and Unblock the Notifications