மழைவேண்டி கழுதைகளுக்கு திருமணம்: கொட்டித்தீர்த்த மழை
இலஞ்சி: மழைவேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் வினோத வழிபாடு நடந்தது.
கடந்த காலங்களில் மும்மாரி மழை பெய்ய வேண்டி வேள்விகள், யாகங்கள், ஹோமம் மற்றும் கோயில்கள், ஏரி, குளங்கள், ஆறு போன்ற பகுதிகளில் மழைவேண்டி வருண ஜெபம் மேற்கொள்வர். அதையே நம் நாட்டு மக்கள் இன்றைய நாள் வரை கடைபிடிக்கின்றனர். நடப்பு ஆண்டில் ஜூன் 1ம் தேதி பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை காலம் தாழ்ந்து ஜூன் 5ம் தேதியும், பின்னர் 17ம் தேதியும் பெய்தது.
அதன்பிறகு பருவமழை பெய்யாமல் ஏமாற்றி வந்ததால் விவசாயிகள் கார் சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்தனர். இதையடுத்து மழை பெய்ய வேண்டி கோயில்களில் சிறப்பு பூஜை, வழிபாடுகளும் நடத்தி வந்தனர். இந்நிலையில் இலஞ்சி டவுன் பஞ்சாயத்து பகுதியில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் வினோத வழிபாடு நடத்தினர்.
கழுதைகளை பிடித்து குளிப்பாட்டி, மேள, தாளம் முழங்கிட சிற்றாற்று வீரியம்மன் கோயில் முன்பு கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்து வீதி வீதியாக அழைத்துச் சென்றனர். கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த சிறிது நேரத்திலேயே மழை தீவிரமடையத் தொடங்கியது. தற்போது குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கன மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீரும், ஏரி, குளம், ஆறு போன்ற பகுதிகளில் தண்ணீர் வரத்தும் அதிகரித்து வருகிறது. வினோத வழிபாடு விசித்திரமாக இருந்தபோதிலும் மழையை வரவழைத்து விட்டதே என பொதுமக்கள் ஆச்சரியப்படுகின்றனர்.


Click it and Unblock the Notifications
