என்னது... தொலைத்தொடர்புத்துறை அமைச்சர்கள் குழு தலைவர் ப.சிதம்பரமா?: பாஜக எதிர்ப்பு

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி, தொலைத் தொடர்புத் துறைக்கான அதிகாரம் வழங்கும் அமைச்சர்கள் குழு தலைவர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையில் தமது பெயர் இழுக்கப்படுவதால் அவர் அப்பொறுப்பில் இருந்து விலகினார்.
இதையடுத்து தொலைத் தொடர்புத் துறைக்கான அதிகாரம் வழங்கப்பட்ட குழுவுக்கு மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. இதற்கு பாஜக ஆட்சேபனை தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:
தொலை தொடர்பு துறைக்கான அதிகாரம் வழங்கப்பட்ட அமைச்சர்கள் குழுவின் தலைவராக ப. சிதம்பரம் நியமிக்கப்படப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதை மத்திய அரசு மறுக்கவில்லை. மிகப்பெரிய அளவில் நேர்மையை கடைப்பிடித்து வருவதாக கூறியுள்ள பிரதமர் மன்மோகன்சிங் முகத்தில் சந்தேக ரேகையை படர விடுவதாக இது அமைந்துள்ளது. ஆ.ராசாவும், ப.சிதம்பரமும் சந்தித்து பேசிய பிறகே ஸ்பெக்ட்ரம் உரிமத்துக்கான விலை நிர்ணயிக்கப்பட்டதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப.சிதம்பரமும் விசாரிக்கப்படவேண்டும் என்று ஆ. ராசா குரல் கொடுத்துள்ளார். இன்னும் சிலரோ ப. சிதம்பரத்தை குற்றவாளிகளில் ஒருவராக சேர்க்க வேண்டும் என்று கருதுகின்றனர். இப்படிப்பட்ட நிலையில், எப்படி ப.சிதம்பரத்தை தொலைதொடர்பு துறைக்கான அதிகாரம் அளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவின் தலைவராக நியமிக்கப்போகிறார் என்பதை பிரதமர் விளக்க வேண்டும்
இது தேசத்தின் மீதான கொடூர ஜோக்' என்றுதான் சொல்ல வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications