கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து விலகினார் சதான்ந்த கவுடா..ஆளுநரிடம் கடிதம் கொடுக்கிறார்!

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஓராண்டாக ஆளும் பாஜகவில் உட்கட்சி மோதல் நீடித்துவந்தது. முன்னாள் முதல்வர் எதியூரப்பா தம்மை முதல்வராக்க வேண்டும் என்று கோரிவந்தார். ஆனால் அவர் மீதாத சுரங்க முறைகேடு வழக்கு நிலுவையில் இருப்பதால் பாஜக மேலிடம் அந்த கோரிக்கையை நிராகரித்துவந்தது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்போம் என்று எதியூரபபா கோஷ்டி அறிவித்தது. மேலும் அவரது ஆதரவு அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். இதனால் சிக்கல் மேலும் வலுத்தது.
இதையடுத்து எதியூரப்பாவின் லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக்கி பிரச்சனைக்கு தீர்வு காண பாஜக மேலிடம் முடிவெடுத்தது. இதற்கு மூத்த பாஜக தலைவர் அத்வானி கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். இதனிடையே பாஜக மூத்த தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வந்தனர். மேலும் சதானந்த கவுடா தமக்கு மாநில பாஜக தலைவர் பதவி கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார்.
இதைத் தொடர்ந்து ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராகவும் ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையும் தற்போதைய கர்நாடக பாஜக மாநிலத் தலைவரும் குருபா சமூகத்தைச் சேர்ந்தவருமான ஈஸ்வரப்பாவையும் துணை முதல்வர்களாக்கவும் பாஜக மேலிடம் தீர்மானித்தது.
இதன்படி இன்று டெல்லியில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நிதின் கத்காரியிடம் முதல்வர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை சதானந்த கவுடா கொடுத்துள்ளார். பெங்களூர் திரும்பியதும் முறைப்படி தமது கடிதத்தை ஆளுநரிடம் கொடுக்க உள்ளதாகவும் கத்காரியிடம் சதானந்த கவுடா கூறியுள்ளார். இதையடுத்து புதிய முதல்வரை எந்த நேரத்திலும் பாஜக மேலிடம் அறிவிக்கக் கூடும்.












Click it and Unblock the Notifications