எப்படி ஓட்டுப் போட வேண்டும்... 18ம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களுக்கு விளக்கம்!
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது உள்ளிட்டவை குறித்து வருகிற 18ம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களுக்கு விளக்கம் அளிக்கப்படவுள்ளது.
ஜூலை 19ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் பி.ஏ.சங்மாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிமுகவுக்குத்தான் அதிக அளவிலான வாக்குகள் உள்ளன. 2வது இடத்தில் திமுக உள்ளது.
தமிழகத்தில் சங்மாவுக்கான வாக்குகளில் குழப்பம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக தனது கட்சி எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இந்தக் கூட்டம் 18ம் தேதி நடைபெறுகிறது.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 18-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு, சென்னை அதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெறுகிறது. இதற்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குகிறார். அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.
கூட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிகிறது. ஒரு வேளை வீடியோகான்பரன்சிங் மூலம் தனது கட்சி எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களிடம் அவர் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
தற்போது கொடநாட்டில் முகாமிட்டிருக்கும் அவர், வாக்குப் பதிவு தினமான 19ம்தேதி காலைதான் சென்னைக்கு வருவார் என்றும் கூறப்படுகிறது. வாக்களித்து விட்டு மீண்டும் அவர் கொடநாடு திரும்புவார் என்றும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications
